புத்ராஜெயா, ஏப் 2- ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக
மோசடிகளைத் தடுக்கும் வகையில் அமலாக்க நிறுவனங்களை அரசாங்கம்
அணுக்கமாக கண்காணித்து வருகிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிம் கூறினார்.
இத்தகைய கண்காணிப்பு நடவடிக்கைகளின் வாயிலாக நாட்டின்
நலனையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் பொறுப்பினை ஏற்றுள்ள
அரசு ஊழியர்கள் மத்தியில் ஊழல் போன்ற தவறான செயல்கள்
நிகழ்வதைத் தடுக்க முடியும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இது சுங்கத் துறை, உள்நாட்டு வருமான வரி வாரியம் மற்றும்
குடிநுழைவுத் துறைக்கு விடுக்கப்படும் ஒரு நினைவூட்டலாகும். நாங்கள்
அணுக்கமாக கண்காணித்து வருகிறோம். மோசடி தொடர்பான
புகார்களைத் தவிர்க்க இயலும் என நம்புகிறேன் என்று அவர் சொன்னார்.
இன்று இங்கு நடைபெற்ற நிதியமைச்சின் மாதாந்திர ஒன்று கூடும்
நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சுங்கத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஊழல் புகார்கள் அரசு
ஊழியர்களின் தோற்றத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தி விடக் கூடாது.
காரணம் அத்துறையிலுள்ள சிறிய எண்ணிக்கையிலான அதிகாரிகளே
இத்தகைய செயல்களைப் புரிந்துள்ளனர் என்றார் அவர்.
எதிர்மறையான விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல்
சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மற்றும் பணியிட
மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்த சுங்கத் துறையின் தலைமை
இயக்குநரை ( டத்தோ அனிஸ் ரிசானா முகமது ஜைனுடின்) நான்
பாராட்டுகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பொதுச் சேவைத் துறையின் தோற்றத்திற்கு வெகு சிலரால் களங்கம்
ஏற்படுவதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்றும் அவர்
நினைவுறுத்தினார்.


