புத்ராஜெயா, ஏப் 2- பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான ஸ்ரீ பெர்டானாவில் இவ்வாண்டு நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பை நடத்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டமிடவில்லை. மாறாக, மாநில அளவில் அமைச்சுகள் நடத்தும் பொது உபசரிப்பில் அவர் கலந்து கொள்வார்.
அரசாங்கம் சிக்கன நடவடிக்கையை அமல்படுத்த விரும்புவதாகக் கூறிய நிதியமைச்சருமான அவர், தனது இந்த நடவடிக்கையை இதர அரசு துறைகளும் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
விரைவில் கொண்டாடப் படவிருக்கும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு பொது உபசரிப்புகளை நடத்துவதில் அரசு நிறுவனங்கள் குறிப்பாக நிதியமைச்சு அதிக ஆர்வம் காட்ட வேண்டாம் என்று வலியுறுத்தினார்.
யார் பிரமாண்டமாக நடத்துவது என போட்டியிட வேண்டாம். அது உங்கள் பணமல்ல என்று இன்று இங்கு நடைபெற்ற நிதியமைச்சின் மாதாந்திர ஒன்று கூடும் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் சொன்னார்.
இதனிடையே, சற்று ஏற்றம் கண்டுள்ள வாழ்க்கைச் செலவினம் மற்றும் நோன்புப் பொருநாளை கொண்டாட வேண்டியதன் அவசியம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அரசு ஊழியர்களுக்கு சிறப்பு உதவித் தொகையை (பி.கே.கே.) வழங்க அரசாங்கம் முடிவெடுத்ததாக அவர் சொன்னார்.
இந்த பி.கே.கே. திட்டத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்ததால் நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) என்னால் சரியாக உறங்க கூட முடியவில்லை. சுமையைக் குறைப்பதற்கு ஏதுவாக சிறிய தொகை கொடுத்தால் என்ன எனத் தோன்றியது.
அவர்களும் உற்சாகமாகப் பணியாற்றுவார்கள். இந்த பணத்தை விவேகத்துடன் செலவிடுவார்கள் என எதிர்பார்க்கிறேன் எனறு அவர் குறிப்பிட்டார்.
கடந்த மாதம் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 2,000 வெள்ளி (பொதுச் சேவைத் துறை சம்பள முறை தொடக்க ஆய்வு மீதான ஊக்கத் தொகை) நடப்புத் தேவைகளை ஈடு செய்ய போதுமானதாக இருக்காது என தாம் கருதுவதாகவும் அவர் கூறினார்.


