கிள்ளான், ஏப் 2- மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் (எம்.எம்.இ.ஏ.)
எஞ்சிய இரு கடலோர ரோந்துக் கப்பல்களை இன்னும் ஈராண்டுகளில்
பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ
சைபுடின் இஸ்மாயில் நசுத்தியோன் கூறினார்.
ஒ.பி.வி.2 கப்பலின் கட்டுமானம் தற்போது 75 விழுக்காடாகவும் ஒ.பி.வி.3
கப்பலின் கட்டுமானம் 50 விழுக்காடாகவும் உள்ளதன் அடிப்படையில்
இந்த காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
இவ்விரு கப்பல்களையும் விநியோகிப்பதற்கான அசல் காலக்கெடு முடிந்து
விட்ட போதிலும் நாட்டின் கடல் பாதுகாப்பு உபகரணங்களை உயர்ந்த பட்ச
நிலையில் வைக்கும் அரசாங்கத்தின் நோக்கத்திற்கேற்ப இந்த திட்டம்
விரைந்து முடிக்கப்படுவதை உறுதி செய்யும் கடப்பாட்டை அமைச்சு
கொண்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
கடல்சார் அமலாக்க நிறுவனத்தின் துன் ஃபாத்திமா ரோந்துக் கப்பல் மூலம்
கிள்ளான் கடல் பகுதியில் ‘பாகார் லாவுட் சிறப்பு கண்காணிப்பு‘
நடவடிக்கையை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
இதனைக் குறிப்பிட்டார்.
மேலும், 60 கோடி வெள்ளி மதிப்பிலான மேலும் நான்கு
ஹெலிகாப்டர்களை எம்.எம்.இ.ஏ. அடுத்த 18 மாதங்களில்
பெறவுள்ளதாகவும் சைபுடின் கூறினார்.
புதிய ஹெலிகாப்டர்களை கொள்முதல் செய்யும் பணி இரண்டு அல்லது
மூன்று ஆண்டுகளில் முற்றுப் பெறும் என்று உள்துறை அமைச்சின்
தலைமைச் செயலாளர் டத்தோ ருஜி உபி கடந்த ஜனவரி மாதம்
கூறியிருந்தார்.
அந்த ஹெலிகாப்படர்கள் அனைத்தும் சபா கடல் பகுதியில் பாதுகாப்பு
பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக சண்டகானில் உள்ள கடல்சார் வான் போக்குவரத்து மையத்தில் வைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.


