பேங்காக், ஏப் 2 - போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் இரண்டு தாய்லாந்து நாட்டவர்கள் மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு தாய்லாந்து போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (ஒ.என்.சி.பி.) ஒப்படைக்கப்பட்டனர்.
நராதிவாட் மாநிலத்தின் சுங்கை கோலோக் மாவட்டத்தில் உள்ள தாய்-மலேசிய எல்லையில் ஒ.என்.சி.பி. பிராந்திய அலுவலகம் 9, நராதிவாட் மாநில காவல்துறை, நராதிவாட் குடிநுழைவுத் துறை உள்ளிட்டத் தரப்பினர் அவ்விரு கைதிகளையும் பெற்றுக் கொண்டனர் என்று போலீஸ் பொதுச் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் பானுரத் லக்பூன் கூறினார்.
கடந்த ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி தாய்லாந்தின் பிரச்சுவாப் கிரி கான் மாநிலத்தில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதன் மூலம் இவ்விருவரும் கைது செய்யப்பட்டனர். விபத்துக்குள்ளான ஒரு டிரக்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 499 கிலோ மெத்தாம்பெட்டமைன் மற்றும் 100 கிலோ கெட்டமைன் ஆகியவற்றை போலீசார் கண்டுபிடித்தனர். லாரி டிரைவர் அங்கிருந்து தப்பியோடினார்.
மற்ற இரண்டு சந்தேக நபர்களும் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர்களாவர். அவர்கள் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக மலேசியாவில் கைது செய்யப்பட்டு பின்னர் தாய்லாந்திற்கு நாடு கடத்தப்பட்டனர் என்று அவர் நேற்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
அதிக அளவிலான போதைப்பொருளை உட்படுத்திய இந்த போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பில் ஒ.என்.சி.பி. அனைத்து நபர்களிடமும் விசாரணையை விரிவுபடுத்தும்.
எல்லைப் பகுதிகள் அல்லது சரக்குக் கப்பல்கள் மூலம் மூன்றாம் நாடுகளுக்கு கடத்தப்படுவது உட்பட தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் கடத்தலுடன் இந்த கும்பலுக்குத் தொடர்பு இருக்கலாம் என பானுரத் நம்புகிறார்.
வெளிநாடுகளுடன் ஒத்துழைப்பை முன்னெடுப்பதற்குப் பிரதமர் ஸ்ரேத்தா தவிசினும் தாய்லாந்து நீதி அமைச்சரும் ஒரு கொள்கையைக் கொண்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
தாய்லாந்தில் வழக்குத் தொடர்வதற்கு ஏதுவாக சந்தேக நபர்களை மீண்டும் கொண்டு வருவதற்கு ஒ.என்.சி.பி. அண்டை நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படும்.


