ஷா ஆலம், ஏப் 2- சிலாங்கூர் மாநிலத்தில் வெப்பப் பக்கவாதம் தொடர்பில்
இதுவரை புகார் எதுவும் பெறப்படவில்லை என்று பொது சுகாதாரத்
துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.
தற்போது நிலவி வரும் வெப்ப வானிலை தொடர்பில் தமது தரப்பு சுற்றுச்
சூழல் துறையிடன் அணுக்கமாக ஒத்துழைத்து வருவதாக ஜமாலியா
ஜமாலுடின் கூறினார்.
இவ்விவகாரம் தொடர்பில் நடத்தப்படும் சந்திப்புகளில் மாநில பேரிடர்
பிரிவு மற்றும் மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவு ஆகியவையும்
இடம் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தற்போது வானிலை நிச்சயமற்றதாகவும் வெப்ப பக்கவாதம்
ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாகவும் இருக்கிறது. இருப்பினும் இதன்
தொடர்பில் சுற்றுச்சூழல் துறையிடமிருந்து எந்த புகாரும்
கிடைக்கவில்லை என்று அவர் சொன்னார்.
நாங்கள் பல முறை கூட்டங்களை நடத்தியுள்ளோம். வெப்ப பக்கவாதப்
பிரச்சனை ஏற்படும் பட்சத்தில் அதனைக் கையாள்வதற்குரிய ஆற்றல்
நமக்கு உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
நேற்றிரவு இங்குள்ள சண்டாட் தெராப்போங் உணவகத்தில்
ஊடகவியலாளர்களுடன் நோன்பு துறப்பு நிகழ்வில் கலந்து கொண்டப்
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
வெப்ப வானிலையின் போது குறிப்பாக பெருநாள் காலத்தில் பொதுமக்கள்
போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்
என்றும் ஜமாலியா கேட்டுக் கொண்டார்.
தற்போது நாட்டில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த வெப்ப
காலத்தில் அதிகமாக நீர் அருந்தும் வேளையில் வெளியில் செல்லும் போது உடன் குடையைக் கொண்டுச் செல்வது பாதுகாப்பானது என அவர் ஆலோசனை கூறினார்.


