கோலாலம்பூர், ஏப் 1- இவ்வாண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி வரை வருமான வரி பாக்கி வைத்துள்ள 182,666 பேருக்கு எதிராக உள்நாட்டு வருமான வரி வாரியம் பயணத் தடையை அமல்படுத்தியுள்ளது.
அவர்களில் 171,157 பேர் மீது வருமான வரியைச் செலுத்தத் தவறியதற்காகவும் 11,095 பேர் மீது நிலச் சொத்து லாப வரியை செலுத்தாததற்காகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று துணை நிதியமைச்சர் லிம் ஹூய் யிங் கூறினார்.
பயணக்கட்டுப்பாட்டை அமல்படுத்துவதற்கு முன்னர் சம்பந்தபட்டவர்களுக்கு நினைவூட்டல் கடிதங்களை அனுப்புவது, வரி பாக்கி தொடர்பில் மின்னஞ்சல் அனுப்புவது மற்றும் தொலைபேசி வழி தொடர்பு கொள்வது போன்ற நடவடிக்கைகளை உள்நாட்டு வருமான வரி வாரியம் எடுக்கும் என்று அவர் சொன்னார்.
நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் வருமான வரியைச் செலுத்த தவறும் நபர்கள் பயணக்கட்டுப்பாடு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என்று அவர் தெரிவித்தார்.
மேலவையில் இன்று செனட்டர் டத்தின் ரோஸ் சுரியாத்தி ஆலாங் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் லிம் இவ்வாறு குறிப்பிட்டார். வரி செலுத்தத் தவறிய காரணத்திற்காக பயணத் தடை விதிக்கப்பட்டவர்கள் தொடர்பான தரவுகள் குறித்து அவர் கேள்வியெழுப்பியிருந்தார்.
வரி செலுத்துவோர் தங்களின் வரி பாக்கி தொடர்பான தகவல்களை மைடெக்ஸ் எனும் அகப்பக்கம் வாயிலாக அறிந்து கொள்ளலாம். பயணத் தடை தொடர்பான தங்களின் நிலை குறித்து மலேசிய குடிநுழைவுத் துறையின் அக்கப்பத்திலும் சரிபார்த்துக் கொள்ளலாம் என லிம் சொன்னார்.
விமான நிலையத்தில் வரி செலுத்தாதோர் தடுத்து நிறுத்தப்படும் பட்சத்தில் பயணத்தை தொடர்வது குறித்து விவாதிப்பதற்காக குடிநுழைவுத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபரை உள்நாட்டு வருமான வரி வாரியத்தின் பொது உறவு அதிகாரியுடன் தொடர்பு கொள்வதற்கு ஏற்பாடு செய்வார் எனவும் அவர் விளக்கினார்.


