உலு லங்காட், ஏப் 1: ரம்ஜான் பஜார் செக்ஷன் 3, பண்டார் பாரு பாங்கியில் வருகையாளர்களுக்கு RM10 மதிப்புள்ள மொத்தம் 500 ரஹ்மா டிஜிட்டல் கூப்பன்கள் இலவசமாக விநியோகிக்கப்பட்டன.
இது வணிக டிஜிட்டல் மயமாக்கலை ஊக்குவிக்கும் மாநில அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும், குறிப்பாக சிறு வியாபாரிகள் மத்தியில் என டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
"குறிப்பிட்ட ரம்ஜான் பஜாரில் பயன்படுத்துவதற்குப் பொதுமக்கள் RM10 மதிப்புள்ள கூப்பன்களை இலவசமாகப் பெற்றனர். இந்த கூப்பன்கள் விநியோகம் சிலாங்கூர் பிளாட்ஃபார்ம் (பிளாட்ஸ்) இல் வர்த்தகர்களின் பங்கேற்பை ஈர்க்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ஒன்றாகும்," என அவர் பஜாரை ஆய்வு செய்த பிறகு கூறினார்.
மாநில நிர்வாகத்தால் உருவாக்கப்பட்ட பிளாட்ஸ்சின் வழி சந்தையை விரிவுபடுத்தவும், தங்கள் விற்பனையை அதிகரிக்கவும் 20,000க்கும் மேற்பட்ட வணிகர்களும், சிறு வியாபாரிகளும் இதுவரை அதில் இணைந்துள்ளதாக அமிருடின் கூறினார்.
தொழில்முனைவோர் தங்கள் வணிகங்களை டிஜிட்டல் முறையில் நிர்வகிக்க உதவும் வகையில், பிளாட்ஸ் தொழில் முனைவோர் பயிற்சி திட்டம் (U-PLATS) என்ற புதிய திட்டத்தையும் பிளாட்ஸ் அறிமுகப் படுத்தியுள்ளது.


