கோலாலம்பூர், ஏப் 1- அலெக்ஸாண்ட்ரா பேலஸ் அரங்கில் நேற்று நடைபெற்ற ஸ்வாஷி கிளாசிக் லண்டன் போட்டியின் இறுதியாட்டத்திற்குத் தேசிய ஸ்வாஷ் வீராங்கனையான எஸ்.சிவசங்கரி தேர்வானார்.
2022 ஹாங்ஸோவ் ஆசிய போட்டியில் தங்கம் வென்ற சிவசங்கரி, சுமார் ஒரு மணி நேரத்திற்கு நீடித்த அரையிறுதியாட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உலகின் நான்காம் நிலை ஆட்டக்காரரான பெல்ஜியத்தைச் சேர்ந்த நீல் கிலிசை 10-12, 11-7, 11-9 என்ற புள்ளிக் கணக்கில் தோற்கடித்தார்.
போராட்டவாதி என வர்ணிக்கப்படும் கிலிசை தோற்கடிக்கும் அளவுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது குறித்து சிவசங்கரி மன நிறைவு தெரிவித்தார்.
இன்றையப் போட்டியில் நான் வெற்றி பெற்றுள்ளேன். நேற்றையப் போட்டியில் கிடைத்த வெற்றியை நான் நேர்மறையாக எடுத்துக் கொண்டதோடு என் மீது நம்பிக்கையும் கொண்டேன். கிலிசைப் பொறுத்த வரை அவர் ஒரு போராளி. அவர் எப்போதும் அழுத்தம் கொடுப்பவர் என்பதோடு தாக்குதல்கள் மூலம் எதிராளியின் மனோ திடத்தை நிலைகுலையச் செய்வார் என்றார் அவர்.
உலகின் 16ஆம் நிலை ஆட்டக்காரரான சிவசங்கரி இன்றிரவு நடைபெறும் இறுதியாட்டத்தில் உலகின் இரண்டாம் நிலை விளையாட்டாளரான எகிப்து நாட்டின் ஹனிய எல் ஹம்மாமியைச் சந்திக்கவுள்ளார்.


