ஈப்போ, ஏப்ரல் 1: தைப்பிங்கில் தொழிலதிபர் ஒருவர்,போலீஸ் அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து தொலைபேசி மோசடி சிண்டிகேட் மூலம் ஏமாற்றப்பட்டதாக RM418,200யை இழந்துள்ளார்.
மோசடி தொடர்பாக 36 வயதுடைய உள்ளூர் நபரிடமிருந்து நேற்று மாலை 4 மணியளவில் காவல்துறைக்கு புகார் கிடைத்தது என பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் யூஸ்ரி ஹாசன் பஸ்ரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையில், பிப்ரவரி 27 அன்று காலை 10 மணியளவில், காவல்துறை அதிகாரி ஹாசிசி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவரிடமிருந்து பாதிக்கப்பட்ட நபருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது என்று யூஸ்ரி கூறினார்.
வாட்ஸ் அப் செயலி மூலம் பாதிக்கப் பட்டவரின் பெயரில் பிறப்பிக்கப் பட்ட கைது வாரண்டை அனுப்பியதோடு, பாதிக்கப்பட்டவரின் பெயர் குற்றவியல் வழக்கு ஒன்றில் தொடர்புடையதாக உள்ளது என சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரிடம் தெரிவித்துள்ளதாக முகமட் யூஸ்ரி கூறினார்.
"பாதிக்கப்பட்டவரின் பேங்க் நெகாரா மலேசியாவில் உள்ள கணக்கில் நிலையான வைப்புத்தொகை இருப்பதைக் கண்டறிந்ததாகவும் அதனை தனது நிலையான சேமிப்புக் கணக்கிலிருந்து வழக்கமான சேமிப்புக் கணக்கிற்கு மாற்றுமாறு சந்தேக நபர் தெரிவித்ததாகவும் புகார்தாரர் கூறினார்.
சந்தேக நபருக்கு இதற்கு முன் தான் தகவல் எதுவும் கொடுக்காததால், அந்நபர் தனது நிலையான கணக்குத் தகவலை எவ்வாறு அறிந்து கொண்டார் என்று பாதிக்கப்பட்டவருக்குத் தெரியவில்லை என முகமட் யூஸ்ரி கூறினார்.
சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பிக்க விரும்பினால், அறிவுறுத்தப் பட்டபடி பணத்தை செலுத்துமாறு பாதிக்கப்பட்டவருக்கு சந்தேக நபர், அறிவுறுத்தினார்.
"அச்சம் மற்றும் பதட்டத்தின் காரணமாக, 27 பிப்ரவரி 2024 முதல் மார்ச் 26, 2024 வரை, புகார்தாரர் ஆறு வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மொத்தம் 418,200 ரிங்கிட்களுக்கு ஏழு பணப் பரிமாற்றங்களைச் செய்தார்," என்று யூஸ்ரி கூறினார்.
ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிறகு, பாதிக்கப்பட்டவர் காவல்துறையில் புகார் அளித்தார் மற்றும் குற்றவியல் சட்டப் பிரிவு 420இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டது.
– பெர்னாமா


