கோலாலம்பூர், மார்ச் 30: நியூசிலாந்தின் டெக் போ ஏரியில் இன்று சாலை விபத்தில் உயிரிழந்த இரண்டு மலேசிய மாணவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அன்வார் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவின் மூலம், சம்பவத்தில் காயமடைந்த மற்ற மூன்று மலேசிய மாணவர்களும் விரைவில் குணமடைய ஆசீர்வதிக்கப் பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்.
"நியூசிலாந்தில் உள்ள உயர் ஸ்தானிகராலயம் மூலம் மலேசிய அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் உரிய உதவிகளை வழங்கும்" என்று அவர் கூறினார்.
முன்னதாக, வெலிங்டனில் உள்ள மலேசிய உயர் ஸ்தானிகராலயம் மூலம் வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில், உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.45 மணியளவில் நடந்த சம்பவத்தில் இரண்டு மாணவர்களும் இறந்ததாகத் தெரிவித்தது.
அந்த அறிக்கையின்படி, விபத்தில் ஐந்து மலேசிய மாணவர்கள் ஈடுபட்டதாகவும், காயமடைந்தவர்கள் சவுத் தீவுகளில் உள்ள கிறிஸ்ட்சர்ச் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதற்கிடையில், வெலிங்டனில் உள்ள மலேசிய உயர்ஸ்தானிகராலயத்தின் செய்தித் தொடர்பாளர் பெர்னாமாவால் தொடர்பு கொள்ளப் பட்டபோது, இறந்த மாணவர்கள் மெகாட் அஷ்மான் அகிஃப் மெகாட் இர்மான் ஜெஃப்னி மற்றும் வான் நூர் அட்லினா அலிசா என்று உறுதிப்படுத்தினார், அவர்கள் இருவரும் கேன்டர்பரி பல்கலைக்கழக மாணவர்கள்.
காயமடைந்தவர்கள் கேன்டர்பரி பல்கலைக்கழக மாணவர்களான நூர் ஃபிராஸ் வஃபியா மற்றும் லியா இசபிள் வால்டன், அதே சமயம் முஹம்மட் ஃபாரிஸ் முகமது ஃபைருஷாம் வெலிங்டனின் விக்டோரியா பல்கலைக்கழக மாணவர் ஆவார்.








