NATIONAL

இந்திய வெளியுறவு அமைச்சர்  மலேசியா வருகை- இருதரப்பு, வட்டார விஷயங்கள் குறித்து விவாதிப்பார்

27 மார்ச் 2024, 8:26 AM
இந்திய வெளியுறவு அமைச்சர்  மலேசியா வருகை- இருதரப்பு, வட்டார விஷயங்கள் குறித்து விவாதிப்பார்

கோலாலம்பூர், மார்ச் 27 - இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று முதல் நாளை வரை இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக மலேசியா வருகிறார் என்று வெளியுறவு அமைச்சு (விஸ்மா புத்ரா) கூறியது.

பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய  நாடுகளுக்கான இந்தப்

பயணத்தில் ஜெய்சங்கருடன் இந்திய அரசின் மூத்த அதிகாரிகளும் இடம் பெற்றிருப்பதாக அது கூறியது.

மலேசியாவில் இருக்கும் போது அவர் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹாசனின் விருந்தினராகத் தங்கியிருப்பார்.

மலேசியா-இந்தியா இருதரப்பு விவகாரங்களின் பன்முக பரிமாணங்கள்,  பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் அனைத்துலக பிரச்சினைகள் பற்றிய கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வது உட்பட இரு அமைச்சர்களும் ஆக்கப்பூர்வமான மற்றும் வெளிப்படையான கலந்துரையாடலை நடத்தினர்.

இரு அமைச்சர்களும் உயர் நிலைத் தலைவர்களின் பயணங்கள் குறித்தும்  மலேசியா மற்றும் இந்தியா 7வது கூட்டு ஆணையக் கூட்டத்தை பரஸ்பரம் ஒப்புக்கொள்ளக்கூடிய தேதியில் கூட்டுவது குறித்தும் விவாதித்தனர் என்று விஸ்மா புத்ரா இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தது.

கடந்த ஆண்டு டிசம்பரில் முகமது ஹசான் வெளியுறவு அமைச்சராகப்  பதவியேற்ற பிறகு இது அவர்களின் முதல் சந்திப்பு என்று விஸ்மா புத்ரா மேலும் கூறியது.

ஜெய்சங்கர் இன்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை மரியாதை நிமித்தம்  சந்திக்கவுள்ளதோடு  டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் தியோவையும் சந்திக்க உள்ளார்.

வலுவான பொருளாதார கூட்டாண்மை மற்றும் நெருங்கிய மக்கள்  உறவுகளால் பிணைக்கப்பட்ட மலேசியாவும் இந்தியாவும் நீண்டகால மற்றும் நிலையான உறவுகளைப் பேணி வருகின்றன என்று அது கூறியது.

இந்தியா மலேசியாவின் 12வது பெரிய வர்த்தகப் பங்காளியாக இருந்து வருகிறது. கடந்த 2023ஆம் ஆண்டில் இரு நாடுகளின்  மொத்த வர்த்தகம் 77.76 பில்லியன் வெள்ளியாக  (16.53 பில்லியன் அமெரிக்க டாலர்) இருந்தது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.