NATIONAL

பாங்கியில் குறுகிய கால வெள்ளத் தடுப்புத் திட்டங்களுக்கு  வெ.598,000 ஒதுக்கீடு

27 மார்ச் 2024, 8:15 AM
பாங்கியில் குறுகிய கால வெள்ளத் தடுப்புத் திட்டங்களுக்கு  வெ.598,000 ஒதுக்கீடு

கோலாலம்பூர், மார்ச் 27 - பாங்கியில் ஏற்படும் வெள்ளப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான  குறுகிய கால முன்னெடுப்புகள் அல்லது திட்டங்களைச் செயல்படுத்த எரிசக்தி மாற்றம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு கடந்த  2022 ஆம் ஆண்டில் 598,000 வெள்ளியைச் செலவிட்டது

உலு லங்காட்டில் உள்ள சுங்கை லோங்,  சுங்கை செரிங், சன்வே செராஸ் ஆகிய பகுதிகளில்  ஆற்றின் கரையை வலுப்படுத்துவது மற்றும்  உறுதிப்படுத்துவது ஆகியப் பணிகள் இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டன  என்று  அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசோப் கூறினார்.

சுங்கை லங்காட், தாமான் ஸ்ரீ இண்டா, பாலக்கோங் மற்றும் செராஸ் ஆகிய இடங்களில் ஆற்றின் கரைகளை வலுப்படுத்துவதும்  இந்த பணிகளில் அடங்கும் என்று அவர் கூறினார்.

அவசரநிலை ஏற்படும் பட்சத்தில் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப தேவையான பணிகளைச் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று மக்களவையில்  இன்று பாங்கி உறுப்பினர்  ஷாரெட்ஜான் ஜோஹன் எழுப்பிய  துணைக் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் தெரிவித்தார்.

பாங்கியில் வெள்ளத்தை குறைப்பதற்கும்  பராமரிப்பு பணிகள் மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்கும்  அமைச்சு மேற்கொண்டு வரும்  திட்டங்கள் குறித்து ஷாரெட்ஜான் கேள்வியெழுப்பியிருந்தார்.

பாங்கியில் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறையின் (ஜேபிஎஸ்) மேற்பார்வையின் கீழுள்ள  ஆறுகள், குளங்கள் மற்றும் வடிகால்களின் விரிவான பட்டியல் பட்டியலை இருப்பிடம், நீளம் மற்றும் அகலம் போன்ற விரிவான தகவல்களுடன் வழங்குமாறு ஷாரெட்ஸான் கேட்டுக் கொண்டார்.

இக்கேள்விக்கு பதிலளித்த பாடில்லா, பாங்கியில் உள்ள முக்கிய ஆறாக சுங்கை லங்காட் விளங்குவதோடு  இது சிப்பாங் எல்லையிலிருந்து ஜாலான் ரெகோ வரை 42 கிலோமீட்டர் நீளத்தைக் கொண்டதாகவும்  35 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட 90 துணை நதிகளையும் 37.25 கிலோமீட்டர் நீளமுள்ள சுங்கை கிளாங்கின் ஒன்பது கிளை நதிகளையும் கொண்டுள்ளதாகவும் விளங்குகிறது என்று தெரிவித்தார்.

பாங்கியில் மொத்தம் 58.81 ஹெக்டர் பரப்பளவில் 98 வெள்ளத் தடுப்புக் குளங்கள் உள்ளன. அவற்றில்18 குளங்கள்  வடிகால் மற்றும் நீர்பாசனத் துறையின் மேற்பார்வையில் உள்ளன.

எஞ்சியவை உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பிற அரசு துறைகளால்  கண்காணிக்கப்படுகின்றன என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.