NATIONAL

41 கிலோ கஞ்சா, 300 வேப் போத்தல்கள் பறிமுதல்- பொருள் பட்டுவாடா பணியாளர் கைது

27 மார்ச் 2024, 5:28 AM
41 கிலோ கஞ்சா, 300 வேப் போத்தல்கள் பறிமுதல்- பொருள் பட்டுவாடா பணியாளர் கைது

மலாக்கா, மார்ச் 27- சுமார்  130,971 வெள்ளி  மதிப்புள்ள 41.28 கிலோ கஞ்சா போதைப்பொருள் மற்றும் கஞ்சா திரவம் அடங்கியதாக நம்பப்படும்  300 வேப்  பாட்டில்களுடன் பொருள் பட்டுவாடா பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் (பிளஸ்) தெற்கு தடத்திலுள்ள ஓய்வுப் பகுதியில்  கடந்த மார்ச் மாதம்  24ஆம் தேதி பிற்பகல் 1.35 மணியளவில்  இச்சோதனை மேற்கொள்ளப்பட்டது.

புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் மலாக்கா மாநில போலீஸ் தலைமையகத்தின்  போலீஸ் குழு நடத்திய இந்த  சோதனையில் போதைப்பொருள்  கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர் என நம்பப்படும் 45 வயதான அந்த நபர் கைது செய்யப்பட்டதாக மலாக்கா மாநில  காவல்துறைத் தலைவர் டத்தோ ஜைனோல் சாமா தெரிவித்தார்.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து மலாக்காவில்  போதைப்பொருள் விநியோகிப்பாளராக இருந்து வந்த  அவ்வாடவரின் நடமாட்டம் குறித்து ஒரு மாதத்திற்கும் மேலாக  மேற்கொள்ளப்பட்ட உளவு நடவடிக்கையின் பலனாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக  அவர் கூறினார்.

இச்சோதனையின் போது, சந்தேக நபர் தனி ஒருவராக இருந்தார்.  அவர் ஓட்டி வந்த வேனை சோதனை செய்ததில் சம்பந்தப்பட்ட அனைத்து போதைப் பொருட்களும் வேனில் வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்றார் அவர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் போதைப்பொருள் தொடர்பான முந்தைய குற்றப் பின்னணி கொண்டவர் என்பது சோதனையில் கண்டறியப்பட்டது. மேலும் அவர் போதைப் பொருளை உட்கொண்டிருந்ததும் சிறுநீர் பரிசோதனையில் கண்டறியப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

போதைப்பொருள் கடத்தல்  குற்றத்திற்காக  1952ஆம் ஆண்டு அபாயகர  போதைப்பொருள் சட்டத்தின் 39பி  பிரிவின் இன் கீழ் விசாரணைக்காக உதவுவதற்காக சந்தேக நபர் மார்ச் 30 வரை ஏழு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.