கோலாலம்பூர், மார்ச் 26 – மாணவர் ஒருவருடன் பாலியல் தொடர்பு கொண்டிருந்ததாக எழுந்த புகாரின் பேரில் ஆசிரியை ஒருவரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
முப்பத்தேழு வயதுடைய அந்த ஆசிரியை கடந்த ஞாயிற்றுக்கிழமை சிப்பாங் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் வாக்குமூலம் அளித்ததாகச் சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் கமாருல் அஸ்ரான் வான் யூசோப் கூறினார்.
அந்த ஆசிரியையிடம் வாக்குமூலம் மட்டுமே பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சந்தேக நபரான அவர் கைது செய்யப்படவில்லை. வழக்கின் புகார்தாரர் மற்றும் சாட்சிகள் உட்பட பல தனிநபர்களும் தங்கள் வாக்குமூலங்களை அளித்துள்ளனர் என்று நேற்று வெளியிட்ட ஒரு சுருக்கமான குறுஞ்செய்தியில் அவர் தெரிவித்தார்.
இதன் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாகவும் மேல் நடவடிக்கைக்காக விசாரணை அறிக்கை சட்டத் துறைத் தலைவர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த புகார் தொடர்பில் ஆதாரமற்ற அல்லது தவறான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களைக் காவல்துறை கேட்டுக்கொள்கிறது என்று அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட மாணவர் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
பள்ளி நூலகத்தில் பாடங்களை மீள்பார்வை செய்து கொண்டிருந்த சம்பந்தப்பட்ட மாணவருக்கு 37 வயதுடைய ஆசிரியை பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கடந்தாண்டு செப்டம்பர் 12ஆம் தேதி செய்யப்பட்டப் புகாரைத் தொடர்ந்து போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.


