கோலாலம்பூர், மார்ச் 26 - ‘அல்லா‘ என்ற வார்த்தை பொறிக்கப்பட்ட காலுறைகளை தங்களுக்குத் தெரியாமல் விநியோகித்தது மூலம் ஒப்பந்தத்தை மீறியும் கீழறுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி ஷின் ஜியான் சாங் சென். பெர்ஹாட் நிறுவனம் மற்றும் அந்நிறுவன இயக்குனர் சோ சின் ஹூவாட்டிற்கு எதிராக கே.கே.சூப்பர் மார்ட் அண்ட் சூப்பர்ஸ்டோர் சென். பெர்ஹாட் நிறுவனம் வழக்குத் தொடுத்துள்ளது.
டேவிட் குருபாதம் அண்ட் கோய் வழக்கறிஞர் நிறுவனத்தின் வாயிலாக ஷா ஆலம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில் சோ மற்றும் அவரின் நிறுவனத்தை முதலாவது மற்றும் இரண்டாவது பிரதிவாதியாகக் கே.கே. சூப்பர்மார்ட் பெயர் குறிப்பிட்டுள்ளது.
இந்த வழக்கு மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளதை கே.கே.சூப்பர்மார்ட் நிறுவனத்தின் வழக்கறிஞரான டத்தோ டேவிட் குருபாதம் பெர்னாமாவிடம் உறுதிப்படுத்தினார்.
வருமான இழப்பு ஏற்பட்டதற்கு இழப்பீடாக 15 லட்சம் வெள்ளியும் நிறுவனத்தின் முத்திரைப் பெயருக்கு ஏற்பட்ட களங்கத்திற்கு இழப்பீடாக 10,500 வெள்ளியும் பங்குச் சந்தையில் பட்டியலிடும் தங்களின் முயற்சி கைவிடப்பட்டதற்கான இழப்பீடாக 2 கோடியே 30 லட்சம் வெள்ளியும் படிப்பினை, தண்டனை, முன்மாதிரி தொகை மற்றும் நீதிமன்றம் நியாயமானவை எனக் கருதும் தொகையை இழப்பீடாகவும் வழங்க வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது என்று டேவிட் குருபாதம் தெரிவித்தார்.
மேலும், தங்கள் வர்த்தகத்தில் சட்டவிரோத தலையீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் மேலும் இழப்புகளை ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் பிரதிவாதிகளுக்கு எதிராக இடைக்காலத் தடையுத்தரவையும் நீதிமன்றம் வழங்க வேண்டும் என தாங்கள் கோரியுள்ளதாக அவர் சொன்னார்.
கையுறைகளை தங்கள் நிறுவனத்திற்கு விநியோகம் செய்வதற்கு கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி பிரதிவாதியிடமிருந்து கோரிக்கை வந்ததாகவும் நல்லெண்ண அடிப்படையில் வாதி அதற்கு அனுமதி வழங்கியதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் விற்பனைக்கு வைக்கப்பட்ட காலுறைகளில் பார்கோட் எனப்படும் விலை குறியீடாக ‘அல்லா‘ என்ற வார்த்தை வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


