NATIONAL

ஆண்டுக்கு இரு முறை ‘சிப்ஸ்‘ மாநாடு- வெ.700 கோடி வர்த்தக பரிவர்த்தனையை அடைய இலக்கு

25 மார்ச் 2024, 4:57 AM
ஆண்டுக்கு இரு முறை ‘சிப்ஸ்‘ மாநாடு- வெ.700 கோடி வர்த்தக பரிவர்த்தனையை அடைய இலக்கு

ஷா ஆலம், மார்ச் 25 - சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்சநிலை மாநாட்டை இவ்வாண்டு இரு முறை நடத்த  திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டின் வாயிலாக 700 கோடி வெள்ளி மதிப்புள்ள வர்த்தக பரிவர்த்தனையை பதிவு செய்யவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இம்மாநாட்டு கண்காட்சியில் பங்கேற்போரிடமிருந்து அபரிமித ஆதரவு கிடைத்ததைத் தொடர்ந்து முதலீட்டு வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் வரும் ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த மாநாட்டை ஏற்பாடு செய்வதன் மூலம் வர்த்தக சூழலை உருவாக்குவதற்கான பொருளாதார வடிவமைப்புக்கு புத்துயிரூட்டுவதற்கும்  வாய்ப்பு கிட்டும் என்று அவர் சொன்னார்.

கோலாலம்பூர் அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் பொருட்களை காட்சிக்கு வைப்பதற்கு ஏதுவாக 1,200 கண்காட்சிக் கூடங்களும் ஏற்பாடு செய்யப்படும். இம்மாநாட்டில் பல்வேறு பின்னணிகளை கொண்ட 60,000 பேர் வருகை புரிவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் தனது பேஸ்புக் பதிவில்  தெரிவித்தார்.

கடந்த 2016ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் இந்த சிப்ஸ் மாநாட்டில் பல்வேறு அரசு துறைகள் மட்டுமின்றி சீனா, இந்தோனேசியா, ஜப்பான், உகாண்டா, வியட்நாம், கசகஸ்தான், கொரியா, துருக்கி, கென்யா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் பங்கேற்கின்றன.

இந்த மாநாடு ஆறு முதன்மை நிகழ்ச்சி நிரல்களைக் கொண்டுள்ளது. சிலாங்கூர் அனைத்துலக கண்காட்சி (உணவு மற்றும் பானங்கள்), சிலாங்கூர் அனைத்துலக கண்காட்சி (மருத்துவம்) ஆகியவையும்  இதில் அடங்கும்.

இவை தவிர, சிலாங்கூர் தொழிலியல் பூங்கா கண்காட்சி, சிலாங்கூர் விவேக நகர மற்றும் டிஜிட்டல் கண்காட்சி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கண்காட்சி, ஆசிய வர்த்தக மாநாடு ஆகியவை நிகழ்ச்சி நிரலின் இதர அங்கங்களாகும்.

கடந்தாண்டு நடைபெற்ற அனைத்துலக வர்த்தக உச்ச நிலை மாநாட்டில் 612 கோடி வெள்ளி மதிப்புள்ள வர்த்தக பரிவர்த்தனை பதிவு செய்யப்பட்டது. இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 150 கோடி வெள்ளியைக் காட்டிலும் இது நான்கு மடங்கு அதிகமாகும்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.