NATIONAL

நான்கு மாநிலங்களில் இ.சி.ஆர்.எல். இரயில் திட்டப் பணிகள் 62.40 விழுக்காடு பூர்த்தி 

25 மார்ச் 2024, 4:53 AM
நான்கு மாநிலங்களில் இ.சி.ஆர்.எல். இரயில் திட்டப் பணிகள் 62.40 விழுக்காடு பூர்த்தி 

கோத்தா பாரு, மார்ச் 25- கிழக்குக் கரை நெடுஞ்சாலை திட்டத்தின் (இ.சி.ஆர்.எல்.) கிளந்தான், திரங்கானு, பகாங் மற்றும் சிலாங்கூர் ஆகிய நான்கு மாநிலங்களை உள்ளடக்கிய பகுதிகளில் ஒட்டுமொத்த கட்டுமானப் பணிகளில் 62.40 விழுக்காடு பூர்த்தி அடைந்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் இந்த அடைவு நிலை பதிவு செய்யப்பட்ட வேளையில் கட்டுமானப் பணிகள் சீராக நடைபெற்று வருகின்றன என்று மலேசியா ரயில் லிங்க் சென். பெர்ஹாட் (எம்.ஆர்.எல்.) நிறுவனத்தின் தலைமைச் செயல் முறை அதிகாரி டத்தோஸ்ரீ டார்விஸ் அப்துல் ரசாக் கூறினார்.

கிளந்தான் மாநிலத்தை பொறுத்தவரை இ.சி.ஆர்.எல். கட்டுமானப் பணிகள் 75.8 விழுக்காடு முழுமை பெற்றுள்ளதாக அவர் சொன்னார்.

கிளந்தான் மாநிலத்தில் மொத்தம் 43 கிலோ மீட்டரை உட்படுத்திய இ.சி.ஆர்.எல். தடத்தில் இரண்டு இரயில் நிலையங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன. கோத்தா பாரு நிலையம் பயணிகளுக்காகவும் பாசீர் பூத்தே நிலையம் பயணிகள் மற்றும் சரக்கு கையாளும் பணிகளுக்காகவும் பயன்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

கோத்தா பாரு முதல் சிலாங்கூர் மாநிலத்தின் கோம்பாக் ஒருங்கிணைந்த முனையம் வரையிலான பகுதி திட்டமிட்டப்படி வரும் 2026 டிசம்பர் மாதம் கட்டி முடிக்கப்பட்டு 2027ஆம் ஆண்டு ஜனவரியில் செயல்படத் தொடங்கும். கோம்பாக் முதல் கோலக்கிள்ளான் வரையிலான பகுதி 2027ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முழுமை பெறும் என்றார் அவர்.

நேற்றிரவு இங்கு நடைபெற்ற இ.சி.ஆர்.எல். நோன்பு துறப்பு நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

கிளந்தான் மாநிலத்தில் 43 கிலோ மீட்டரை உள்ளடக்கிய இரயில் தண்டவாள நிர்மாணிப்பு பணியில் காணப்படும் மேம்பாடு வரவேற்கத்தக்க வகையில் உள்ளதாகக் கூறிய அவர், இத்திட்டத்திற்காக நிலத்தை ஆர்ஜிதம் செய்யும் பணியும் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு விட்டது என்றார்.

அண்மையில் நாங்கள் மூன்று சுரங்கப் பாதைகளை வெற்றிகரமாகக் குடைந்துள்ளோம். மொத்தம் உள்ள 42 சுரங்கங்களில் 35 சுரங்கங்களை குடையும் பணி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு விட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.