கோலாலம்பூர், மார்ச் 25 - சுங்கை பூலோ மருத்துவமனையின்
ஒருங்கிணைந்த குவார்ட்டஸ் குடியிருப்பின் ‘பி‘ புளோக் கட்டிடத்தின் 16
மாடியிலிருந்து விழுந்து நான்கு வயது சிறுவன் பரிதாபமாக
உயிரிழந்தான்.
இந்த சம்பவம் தொடர்பில் நேற்று மாலை 4.28 மணியளவில் தங்களுக்கு
புகார் கிடைத்ததாக சுங்கை பூலே மாவட்ட போலீஸ் தலைவர்
சூப்ரிண்டெண்டன் முகமது ஹாபிஷ் முகமது நோர் கூறினார்.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ்காரர்கள் அச்சிறுவன் சம்பவ
இடத்திலேயே உயிரிழந்து விட்டதைக் கண்டனர் என்று நேற்று இங்கு
வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இச்சம்பவம் நிகழ்ந்த போது 30 வயது மதிக்கத்தக்க அச்சிறுவனின்
பெற்றோர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தது தொடக்க கட்ட
விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார் அவர்.
உறக்கத்திலிருந்து எழுந்த தாயார் வீட்டின் வரவேற்பரையில் திறந்திருந்த
ஜன்னலின் விளிம்பில் தனது இளைய மகன் நின்று கொண்டிருப்பதைக்
கண்டார். விரைந்து வந்து பிடிப்பதற்குள் அச்சிறுவன் தவறி கீழே விழுந்து
விட்டான் என்றார் அவர்.
அச்சிறுவன் உயிரிழந்து விட்டதை சம்பவ இடத்திலிருந்த மருத்துவ
அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாகக் கூறிய அவர், மரணத்திற்கான
காரணத்தைக் கண்டறிய தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு
வருகிறது என்றார்.
இச்சம்பவம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டு விசாரணை அறிக்கை
திறக்கப்பட்டுள்ளதோடு அச்சிறுவனின் பெற்றோர்களும் விரைவில்
வாக்குமூலம் பெறுவதற்காக அழைக்கப்படுவர் என்று அவர் மேலும்
தெரிவித்தார்.




