செய்தி ; சு.சுப்பையா
சுங்கை பூலோ.மார்ச்.24- நூற்றாண்டு வரலாற்றைச் சுமந்து நிற்கும் கோல்பில்ஸ் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயக் கட்டுமானத்துக்கு நிதியுதவி செய்ய முடிந்த அளவில் முயற்சியை மேற்கொள்கிறேன் என்று கோல சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினரும் சுகாதார அமைச்சருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளியின் அரசியல் செயலாளர் துவான் ஹாஜி முகமட் பைசால் வாக்குறுதி அளித்தார்.
[caption id="attachment_503857" align="aligncenter" width="500"]
துவான் முகமட் பைசால் ஆலய கட்டுமான பணியை பார்வையிட்ட பின்னர் ஆலயத் தலைவர் முகமட் பைசாலுக்கு மாலை அணிவித்து கௌரவிக்கிறார். அருகில் ஜெரம் சட்ட மன்றத்தின் இந்திய சமுதாயத் தலைவர் மணிவண்ணன் மற்றும் ஆலய நிர்வாகத்தினர்.[/caption]
கடந்த 7 ஆண்டுகளாக இந்த ஆலயம் கட்டப்பட்டு வருகிறது. ஆலய உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் கொடுத்து வரும் நிதியுதவியால் இது வரையில் 13 லட்சம் ரிங்கிட் செலவிடப்பட்டுள்ளது. இன்னும் கோவில் முழுமையாக பூர்த்தியடைய குறைந்தது 5 லட்சம் ரிங்கிட் தேவை படுகிறது.
அதே வேளையில் கும்பாபிசேகத்துக்கு மேலும் 3 லட்சம் ரிங்கிட் தேவைப்படுகிறது என்று இக்கோவிலின் கட்டுமானப் பணிக் குழு தலைவர் மணிவண்ணன் தெரிவித்தார்.
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஆலய நில விவகாரத்திற்கு தீர்வு காணப்பட்டது. கே.எல்.கெப்போங் மேம்பாட்டாளர் நிறுவனம் கோவில் நிலத்தை அதே இடத்தில் நிலைத்திருக்க உறுதி செய்தது. சுமார் நூறாண்டுகளாக கரி மலை தோட்டம் என்று முன்பு தமிழர்களால் அழைக்கப்பட்ட இந்தக் கோல்பில்ஸ் தோட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் பின்னர் டேசா கோல்பில்ஸ் ஆலயமாக உருமாறி, தற்போது பண்டார் ஸ்ரீ கோல்பில்ஸ் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயமாக வளர்ச்சியடைந்துள்ளது.
கடந்த 7 ஆண்டுகளாக ஆலயக் கட்டுமான நிர்வாகம் ஏறக்குறைய 13 லட்சம் ரிங்கிட் செலவில் கட்டுமானப் பணிகளைச் செய்து வந்தது.
ஆலயத்தைக் கட்டி முடிக்க மேலும் 5 லட்சம் நிதி தேவைப்படுகிறது. இதற்காக ஜெரம் சட்ட மன்ற இந்தியச் சமுதாயத் தலைவரான மணிவண்ணனின் உதவியை நாடினர். ஆலய நிர்வாகம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த நிதிப் பிரச்னையைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் சுகாதாரத் துறை அமைச்சருமான டத்தோ ஸ்ரீ ஜூல்கிப்ளியின் கவனத்துக்கு தலைவர் மணிவண்ணன் கொண்டு சென்றார்.
ஆலயத்திற்கு வருகை தந்த அமைச்சரின் அரசியல் செயலாளர் துவான் முகமட் பைசாலுக்கு ஆலய கட்டுமான விவகாரம் குறித்து முழு விளக்கம் அளித்தனர் ஆலய நிர்வாகத்தினர்.
தொடர்ந்து ஆலயக் கட்டுமானப் பணியையும் முகமட் பைசால் பார்வையிட்டார்.
ஆலய நிர்வாகத்தின் நிதி கோரிக்கையை அமைச்சரின் உதவியுடன் வீடமைப்பு ஊராட்சி அமைச்சர் ங்ஙா கோர் மிங் கவனத்துக்கு கொண்டு சென்று கணிசமான நிதியைப் பெற்றுத்தர ஆவன செய்வதாக முகமட் பைசால் வாக்குறுதி அளித்துச் சென்றார்.
ஆலயத்துக்கு சிலாங்கூர் மாநில அரசு ஆண்டுதோறும் ரி.ம. 10,000.00 நிதியுதவி செய்து வருகின்றனர் என்று KKI தலைவர் மணிவண்ணன் தெரிவித்தார்.
அதே வேளையில் ஆலயத் தலைவர் மணிவண்ணனும் சிலாங்கூர் மாநில அரசு செய்துவரும் நிதி உதவிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
ஆலய நிர்வாகம் கட்டுமான பணியைத் தொடர்ந்து மேற்கொள்ள நிதி தட்டுப்பாடுகளை எதிர் நோக்கி வருவதால் சிலாங்கூர் மாநில அரசு மேலும் சற்றுக் கூடுதலான நிதியுதவி செய்ய வேண்டும் கோரிக்கையை முன் வைத்தார்.
கடந்த பொதுத் தேர்தலின் போது டத்தோ ஸ்ரீ ஜூல்கிப்ளி ஆலயத்திற்கு வருகை தந்தார். அப்போது அவருக்கு பொன்னாடை போர்த்தி, பரிவட்டம் கட்டி, தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் அமைச்சராக வருவீர் என்று ஆசீர்வாதம் வழங்கி அனுப்பி வைத்தோம். அதே போல் கடந்த 2022 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று 2024 ஆம் ஆண்டில் மீண்டும் சுகாதாரத்துறை அமைச்சராகப் பதவி ஏற்றுள்ளார் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி . அவர் எங்கள் ஆலயக் கட்டுமானப் பணிக்குக் கணிசமான தொகையைப் பெற்றுத் தருவார் என்று எதிர் பார்க்கிறோம் என்று ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.








