காஜாங், மார்ச் 21- போதைப் பொருள் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 1 கோடியே 41 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப் பொருள்களைக் கைப்பற்றினர்.
இங்குள்ள பண்டார் மக்கோத்தா செராசில் இரு தினங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில் கூரியர் எனப்படும் பொருள் பட்டுவாடா சேவையைப் பயன்படுத்தி போதைப் பொருளைக் கடத்திய அக்கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது.
காலை 11.00 மணியளவில் வாகனம் ஒன்றில் இருந்த 33 மற்றும் 44 வயதுடைய இரு ஆடவர்களைக் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 62.7 கிலோ ஷாபு போதைப் பொருளைக் கைப்பற்றியதாக புக்கிட் அமான் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் இயக்குநர் டத்தோ காவ் கோக் சின் கூறினார்.
நான்கு மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட உளவு நடவடிக்கையின் வாயிலாக அவ்விருவரும் கைது செய்யப்பட்டனர். அவ்விருவரிடமிருந்து கிடைத்த தகவலின் பேரில் போதைப் பொருள் சேமிப்பு கிடங்காக பயன்படுத்தப்பட்ட ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றைச் சோதனையிட்டு பெரிய அளவில் பல்வேறு வகையான போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனர் என்றார் அவர்.
அவ்விருவரும் போதைப் பொருள் கிடங்கின் பாதுகாவலர்களாகவும் கிள்ளான் பள்ளத்தாக்கு வட்டாரத்தில் கூரியர் சேவை மூலம் போதைப் பொருளை விநியோகிப்பவர்களாகவும் செயல்பட்டு வந்துள்ளதாகக் கூறிய அவர், இந்த பணியை மேற்கொள்வதற்காக அவர்களுக்கு 2,000 வெள்ளி முதல் 3,000 வெள்ளி வரை கமிஷன் வழங்கப்பட்டு வந்துள்ளது என்றார்.
கைது செய்யப்பட்ட இருவரும் 1952ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் 39பி பிரிவின் கீழ் விசாரணைக்காக நேற்று தொடங்கி ஆறு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.








