ஷா ஆலம், மார்ச் 21- சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) ஆதரவிலான ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை வார இறுதியில் ஒன்பது செகி ப்ரெஷ் பேரங்காடிகளில் நடைபெறவுள்ளது.
கோழி, மீன், அரிசி, இறைச்சி, காய்கறிகள் உள்ளிட்ட சமையல் பொருள்கள் மலிவான விலையில் வாங்குவதற்குரிய வாய்ப்பினை வழங்கும் விற்பனை இயக்கம் நாளை சனிக்கிழமை கோம்பாக், பண்டார் சவுஜானா புத்ரா, பந்திங் மற்றும் கிள்ளான் செகி ஃபிரெஸ் கிளைகளில் நடைபெறும்.
ஞாயிற்றுக் கிழமை பத்து கேவ்ஸ், தாமான் அமினா, ஸ்ரீ மூடா, பண்டார் மக்கோத்தா பந்திங், அவானி பாங்கி ஆகிய இடங்களில் இந்த மலிவு விற்பனை நடைபெறவுள்ளதாக செகி ஃப்ரெஷ் நிறுவனம் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியது.
மலிவான விலையில் தரமானப் பொருள்களைப் பெறுவதற்கான வாய்ப்பினை நழுவ விடாதீர்கள். செகி ஃபிரெஷ் பேராங்காடி ஊழியர்களிடம் உங்கள் மைகார்டைக் காட்டி சிறப்புக் கூப்பன்களைப் பெறுங்கள் என அது தெரிவித்தது.
வாழ்க்கைச் செலவின அதிகரிப்பினால் சிரமத்தை எதிர்நோக்கியிருக்கும் மக்களுக்கு குறிப்பாக பி40 தரப்பினருக்கு உதவும் நோக்கில் சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து இந்த திட்டத்தை செகி ஃப்ரெஷ் நிறுவனம் அமல்படுத்தியுள்ளது.
மலிவு விற்பனைத் திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கில் பி.கே.பி.எஸ். மற்றும் செகி ஃப்ரெஷ் பேரங்காடிக்கும் இடையே கடந்தாண்டு ஜூலை மாதம் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த மலிவு விற்பனை நடத்தப்படுகிறது.
சந்தையை விட குறைவான விலையில் பொருள்களை விற்பனை செய்வதன் மூலம் மக்களுடன் அணுக்கமான நட்புறவை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக செகி ஃப்ரெஷ் பேரங்காடி தனது பேஸ்புக் பதிவில் கூறியது.
முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் இறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் பி கிரேட் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.
இந்த மலிவு விற்பனைத் திட்டத்திற்கு மாநில அரசு இதுவரை நான்கு கோடி வெள்ளியை உதவித் தொகையாக வழங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் மூவாயிரம் இடங்களில் நடைபெற்ற இந்த மலிவு விற்பனைகளின் வாயிலாக இதுவரை ஐம்பது லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.








