ஜோகூர் பாரு, மார்ச் 20 - ஒன்றரை வயதே நிரம்பிய தன் மகனை அவரின்
தாயாரே கழுத்தை அறுத்து கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம்
தொடர்பான விசாரணைக்கு உதவும் பொருட்டு போலீசார் அறுவரிடம்
வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
அந்த பச்சிளம் குழந்தையின் மரணம் தொடர்பான விசாரணைக்காகச்
சம்பந்தப்பட்ட அப்பெண்ணின் கணவர், உறவினர்கள் மற்றும்
நண்பர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று ஜோகூர்
மாநிலப் போலீஸ் தலைவர் சி.பி. எம். குமார் கூறினார்.
முப்பத்திரண்டு வயதுடைய அந்த மாதுவுக்கு மனநலப் பிரச்சனை உள்ளதா
என்பதைக் கண்டறிவதற்காக அவர் மீது மேற்கொள்ளப்பட்ட முழுமையான
மருத்துவப் பரிசோதனையின் முடிவுக்காகத் தாங்கள் காத்திருப்பதாக அவர்
சொன்னார்.
அந்த மாதுவுக்கு மருத்துவப் பிரச்சனை ஏதும் இல்லை என்பது தொடக்கக்
கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருப்பினும், முழுமையான
மருத்துவ அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்று அவர்
தெரிவித்தார்.
அந்த பெண் தற்போது தம்போய் பெர்மாய் மருத்துவமனையில் (தடுத்து)
வைக்கப்பட்டுள்ளார். அவரின் உடலில் ஏற்பட்ட சிறிய காயங்களுக்காக
அவர் சிகிச்சைப் பெற்று வருகிறார். தற்போதைக்கு அவர் எங்களுக்கு முழு
ஒத்துழைப்பை நல்கி வருகிறார் என்று இங்குள்ள பிளாசா அங்சானாவில்
ரமலான் சந்தையைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம்
கூறினார்.
இந்த கொலைக்கான காரணத்தை தாங்கள் தொடர்ந்து ஆராய்ந்து
வருவதாகக் குமார் சொன்னார்.
குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் விசாரணை
மேற்கொள்வதற்காக அப்பெண் பெர்மாய் மருத்துவமனையில் ஏழு
நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த மார்ச் 15ஆம் தேதி பாசீர் கூடாங்கில் உள்ள குடியிருப்பு பகுதி
ஒன்றில் பெண்மணி ஒருவர் தன் மகனின் கழுத்தை அறுத்து படுகொலை
செய்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.




