கோலாலம்பூர், மார்ச் 19 - நாட்டில் 1967ஆம் ஆண்டு போலீஸ் சட்டத்தின் (சட்டம் 344) 10 ஷரத்துகளில் திருத்தங்கள் செய்யப்படவுள்ளன. அவற்றில் அரச மலேசிய போலீஸ் படையின் கௌரவ தலைமை ஆணையராக மாட்சிமை தங்கிய பேரரசரை நியமனம் செய்வதற்கு ஏதுவாக புதிதாக 6ஏ எனும் பிரிவை இதில் சேர்ப்பதும் அடங்கும்.
அந்த சட்டத்தின் 2வது ஷரத்தில் உள்ள விதிகளை திருத்தம் செய்வதும் இந்த உத்தேச சட்டத் திருத்தத்தல் உள்ளடங்கியுள்ளது என்று நாடாளுமன்றத்தில் நேற்று விநியோகிக்கப்பட்ட நகல் மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
பொது சாலைகளில் பிரமுகர்கள் உடன் செல்லும் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸ் அதிகாரிகளுக்கு இடையூறாக இருக்கும் அல்லது தடுக்கும் நபர்களுக்கு 10,000 வெள்ளி வரை அபராதம் மற்றும் ஈராண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் அச்சட்டத்தின் 21வது பிரிவின் 4வது ஷரத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளது. இத்தகைய குற்றங்களுக்கு தற்போது 200 வெள்ளி வரையிலான அபராதமும் இரண்டு மாதச் சிறைத் தண்டனையும் விதிக்கப்படுகிறது.
போலீஸ் அதிகாரியால் ஏற்படுத்தப்பட்ட அல்லது அமைக்கப்பட்ட தடுப்புகளை அடைவதற்கு முன்பாகவே நிறுத்த வேண்டும் என்ற காவல் துறையின் உத்தரவை பின்பற்றத் தவறும் நபர்களுக்கு விதிக்கப்படும் 1,000 வெள்ளி அபராதத் தொகையை 2,000 வெள்ளியாக உயர்த்துவதற்கு 5வது ஷரத்தில் திருத்தம் செய்யப்படுகிறது.
ரிசர்வ் போலீஸ் அதிகாரியை மறு பணி நியமனம் செய்யத் தவறும் முதலாளிக்குக் கூடுதல் பட்சம் 2,000 வெள்ளி வரையிலான அபராதம் மற்றும் ஓராண்டு வரையிலான சிறைத்தண்டனை விதிக்கும வகையில் 6வது ஷரத்தின் 66வது பிரிவில் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது இக்குற்றத்திற்கு 1,000 வெள்ளி அபராதம் மற்றும் ஆறு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது.
சரியான காரணமின்றி 14 நாட்களுக்குத் தொடர்ச்சியாக வேலைக்கு வரத் தவறும் போலீஸ் அதிகாரி பணியிலிருந்து விலகியதாக கருதப்படுவதோடு குற்றம் புரிந்தவராக கருதப்படும் வகையில் அச்சட்டத்தின் 86வது பிரிவு திருத்தப்படுகிறது.




