ஷா ஆலம், மார்ச் 19 - அடையாளப் பத்திரங்கள் இல்லாதவர்களுக்கு
உதவும் நோக்கில் மாநில அரசினால் அமைக்கப்பட்ட மைசெல் அமைப்பு
இவ்வாண்டின் முதல் காலாண்டில் 32 பேருக்கு அடையாள ஆவணங்களை
வெற்றிகரமாகப் பெற்றுத் தந்துள்ளது.
இவ்வாண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாதங்களில்
அடையாள ஆவணங்கள் தொடர்பில் மொத்தம் 85 விண்ணப்பங்களை
மைசெல் பெற்றதாக மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான
ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு கூறினார்.
அந்த 85 பேரில் 32 பேரின் விண்ணப்பங்களை தேசிய பதிவுத் துறை
பரிசீலித்து அவர்களுக்கு உரிய ஆவணங்களை வழங்குவதற்கு அங்கீகாரம்
வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.
நீல அடையாளக் கார்டு, பிறப்பு பத்திரம், குடியுரிமை மற்றும் தத்தெடுப்புச்
சான்றிதழ் உள்ளிட்ட அடையாள ஆவணங்களை சம்பந்தப்பட்ட 32 பேரும்
பெறுவதற்கு மைசெல் உதவி புரிந்தது என்று அந்த அமைப்புக்கு
பொறுப்பேற்றுள்ள பாப்பாராய்டு குறிப்பிட்டார்.
அடையாள ஆவணங்கள் இல்லாத பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் முழு
மூச்சுடன் ஈடுபட்ட மைசெல் அமைப்பின் அதிகாரிகளான ரகு மற்றும்
திருமதி சாந்தா ஆகியோருக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும்
அவர் சொன்னார்.
அடையாள ஆவணங்களைப் பெற்றவர்களை நேற்று தமது அலுவலகத்தில்
சந்தித்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.




