NATIONAL

ஷா ஆலம் பி.கே.என்.எஸ். காம்ப்ளெக்ஸ் இடிக்கப்படுமா? அந்த தகவலில் உண்மை இல்லை

19 மார்ச் 2024, 2:27 AM
ஷா ஆலம் பி.கே.என்.எஸ். காம்ப்ளெக்ஸ் இடிக்கப்படுமா? அந்த தகவலில் உண்மை இல்லை

ஷா ஆலம், மார்ச் 19 - நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள 47 ஆண்டுகள் பழைமை வாய்ந்த காம்ப்ளெக்ஸ் பி.கே.என்.எஸ். மறுநிர்மாணிப்புக்காக இடிக்கப்படும் என வெளிவந்த தகவலில் உண்மை இல்லை என்று சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகம் (பி.கே.என்.எஸ்.) கூறியுள்ளது.

இத்தகைய ஆதாரமற்ற தகவல்கள் வெளிவந்தது குறித்து தாங்கள் மிகுந்த வருத்தமடைவதாக கூறிய பி.கே.என்.எஸ். இந்த செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது எனத் தெரிவித்தது.

இந்த பொய்யானத் தகவல் தொடர்பில் தாங்கள் போலீசிலும் மலேசிய தொடர்பு மற்றும் பல்லுடக ஆணையத்திலும் புகார் செய்யவுள்ளதாக அது அறிக்கை ஒன்றில் கூறியது.

அந்த கட்டிடத் தொகுதியை உடைக்கும் திட்டம் இல்லை என்பதை பி.கே.என்.எஸ். வலியுறுத்திக் கூற விரும்புகிறது. 47 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அந்த கட்டிடம் ஷா ஆலம் மக்களுக்கு வர்த்தக மற்றும் இதரச் சேவைகளை வழங்கும் மையமாக விளங்கி வருகிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய மேம்பாட்டுத் திட்டத்திற்கு வழி விடும் வகையில் பி.கே.என்.எஸ். மற்றும் ஆலம் சென்ட்ரல் உள்ளிட்ட மாநகரின் மையப்பகுதியில் உள்ள சில கட்டிடங்கள் இடிக்கப்படும் என்று சமூக ஊடக பயனாளர் ஒருவர் தனது எக்ஸ் பதிவில் கூறியிருந்தார்.

இந்த செய்தி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. எனினும், சம்பந்தப்பட்ட பயனாளர் அந்த பதிவை பின்னர் நீக்கி விட்டார். ஆயினும் சில ஊடகங்கள் இதே போன்றச் செய்தியை வெளியிட்டிருந்தன.

ஷா ஆலம் மாநகருக்கு புதுப் பொலிவை ஏற்படுத்தும் விதமாக நகரின் மையப்பகுதியான செக்சன் 14இல் சில மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்ள தாங்கள் திட்டமிட்டுள்ளதாகவும் அப்பணிகள் இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் தொடங்கும் என்றும் பி.கே.என்.எஸ். கூறியது.

சுமார் 200 கோடி வெள்ளி மதிப்பிலான இந்த திட்டம் செக்சன் 14இல் உள்ள சில லோட்களை உள்ளடக்கியிருக்கும். அவற்றில் எஸ்.ஏ.சி.சி. மால் மற்றும் எஸ்.ஏ.சி.சி. மாநாட்டு மையம் ஆகியவையும் அடங்கும். ஆயினும் காம்ப்ளெக்ஸ் பி.கே.என்.எஸ். இதில் உள்ளடங்கவில்லை என்று அது தெளிவுபடுத்தியது.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.