கோலாலம்பூர், மார்ச் 18: நாடு முழுவதும் கடந்த ஆண்டு மொத்தம் 34,497 இணைய மோசடிகளால் RM1.218 பில்லியன் இழப்புகள் பதிவாகியுள்ளன என்று துணை உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஷம்சுல் அனுவார் நசாரா தெரிவித்தார்.
மேலும், 2023 புள்ளிவிவரங்களின் அடிப்படையில், குறுஞ்செய்தி சேவை (SMS) போட்டி மோசடிகள், இணைய ஆள்மாறாட்ட மோசடிகள் மற்றும் தொலைபேசி அழைப்பு மோசடிகள் போன்ற 10,348 தொலைத்தொடர்பு குற்ற வழக்குகளில் RM352.9 மில்லியன் இழப்பு பதிவு செய்யப் பட்டுள்ளன.
"இந்த விஷயத்தில் இணையக் குற்றவியல் மோசடிக்கு விரைவான பதிலை ஒருங்கிணைப்பதில் தேசிய மோசடி தடுப்பு மையமும் (NSRC) தனது பங்கை வகிக்கிறது.
"2023 ஆம் ஆண்டு முழுவதும், மொத்தம் 6,434 விசாரணை ஆவணங்கள் NSRC அழைப்புகள் மூலம் திறக்கப் பட்டுள்ளது, இதில் மொத்தம் RM105.4 மில்லியன் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று இன்று நாடாளுமன்றத்தில் வாய்மொழி கேள்வி பதில் அமர்வின் போது கூறினார்.
அந்தத் தொகையில், 17.5 மில்லியன் ரிங்கிட் குற்றவாளிகளுக்கு செல்லாமல் வெற்றிகரமாகத் தடுக்கப்பட்டதுடன், கைப்பற்றப்பட்ட தொகை சுமார் 178,000 ரிங்கிட் பாதிக்கப்பட்டவர்களுக்குத் திருப்பிக் கொடுக்கப்பட்டதாகவும் ஷம்சுல் அனுவார் கூறினார்.
மோசடி செய்பவர்கள் அல்லது மோசடியால் ஏற்படும் பிரச்சனையை முறியடிப்பதற்கான அமைச்சின் நடவடிக்கைகள் குறித்து செனட்டர் மனோலன் முகமட்டின் கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
ராயல் மலேசியன் காவல்துறை (PDRM) இணைய மோசடி குற்றங்களை எதிர்த்துப் போராடும் பல்வேறு முயற்சிகளையும் செயல்படுத்தியது, ``Semak Mule`` போர்ட்டல் சேவை மற்றும் மோசடி குற்றங்கள் குறித்த சமீபத்திய தகவல்களைப் பொதுமக்களுக்கு வழங்க சமூக ஊடக தளத்தை உருவாக்கியது.
2023 ஆம் ஆண்டு முழுவதும், குற்றம் குறித்த சமூகத்திற்கு விழிப்புணர்வை வழங்குவதற்காக மொத்தம் 1,610 கண்காட்சிகள் மற்றும் 3,727 மோசடிகள் தொடர்பான உரைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
– பெர்னாமா




