டுங்குன், மார்ச் 18 - வடகிழக்கு பருவமழையினால் நாடு முழுவதும் ஏற்பட்ட வெள்ளத்தால் உண்டான இழப்பு சுமார் 100 கோடி வெள்ளி என மதிப்பிடப்பட்டுள்ளது என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமது ஜாஹிட் ஹமிடி கூறினார்.
வெள்ளப் பேரிடரால் ஏற்பட்ட உண்மையான சேதத்தை தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) இன்னும் மதிப்பீடு செய்து வருவதாக அவர் கூறினார்.
ஆனால், இந்த எண்ணிக்கையை கிட்டத்தட்ட 100 கோடி வெள்ளி என நாங்கள் தோராயமாக மதிப்பிட்டுள்ளோம் என்று கிராம மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சின் ஏற்பாட்டில் இங்குள்ள பண்டார் அல் முக்தாபி பில்லா ஷாவில் உள்ள சுல்தான் மாஹ்முட் பள்ளிவாசலில் நடைபெற்ற 'சந்துனான் காசே ரமலான்' நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
கிராமப்புற மற்றும் வட்டார மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ரூபியா வாங் மற்றும் திரெங்கானு தெங்கா மேம்பாட்டு ஆணையத்தின் (கெதெங்கா) தலைவர் டத்தோஸ்ரீ அகமது ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த இழப்புகளில் சாலைகள் போன்ற உள்கட்டமைப்பு சேதங்களும் அடங்கும். கிராம மற்றும் வட்டார மேப்பாட்டு அமைச்சருமான அவர், கூட்டரசு சாலைகளை பொதுப்பணித் துறையும் மற்றும் கிராமப்புற சாலைகளை அமைச்சும் செப்பனிட்டு வருகின்றன என்றார் அவர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடுகளை சரிசெய்வது மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குவது ஆகியவை மாநில மற்றும் மாவட்ட அளவில் நட்மா மூலம் மேற்கொள்ளப்படுவதாகக் கூறிய அவர், கடந்த ஆண்டு வெள்ளத்தின் போது சில மாநிலங்களில் நியாயமற்ற முறையில் வெள்ள உதவி விநியோகம் செய்யப்பட்டது குறித்து வருத்தம் தெரிவித்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அளவில் உதவிகள் வழங்கப்பட்டபோது அரசியல் வேறுபாடுகளால் ஒரு சிலர் பெறுநர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.
இவ்வாறு நடந்திருக்கக்கூடாது என்று நான் நினைக்கிறேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சமத்துவம் மற்றும் நியாயத்தை நிலைநாட்ட விரும்புகிறோம். ஆனால் சில மாநிலங்களில் இது நடக்கவில்லை என்று அவர் மேலும் கூறினார்.




