ஷா ஆலம், மார்ச் 18 - செலாட் கிள்ளான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
மாநில அரசுக்கு வழங்கிய ஆதரவு சிலாங்கூர் மாநில ஒற்றுமை
அரசாங்கத்திற்கு மேலும் வலுவை சேர்க்கும் என்று மந்திரி புசார்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
அப்துல் ரஷிட் அசாரி அண்மையில் எடுத்த இந்த முடிவு நடப்பு
அரசாங்கத்தை வலுப்படுத்துவற்காக மேலும் கடுமையாக
உழைப்பதற்குரிய உத்வேகத்தை அடிமட்ட தலைவர்களுக்கு
ஏற்படுத்தியுள்ளது என்று அவர் சொன்னார்.
அது அவரின் சொந்த முடிவாகும். பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து)
கட்சியின் அமைப்புச் சட்டத்தில் செய்யப்படும் திருத்தங்களின்
விளைவுகளையும் அவர் உணர்ந்திக்கக்கூடும். கட்சியின்
உள்விவகாரங்களும் அவரின் இந்த முடிவுக்கு காரணமாக இருக்கலாம்
என்றார் அவர்.
நேற்றிரவு இங்குள்ள செக்சன் 7, ராஜா மூடா மூசா மண்டபத்தில்
கல்வியாளர் சமூகத்தினருடன் நோன்பு துறக்கும் நிகழ்வில் கலந்து
கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
மலாய் ஆட்சியாளர்களுக்கு எதிராக களங்கம் விளைவிக்கும் விஷயத்தில்
மௌனம் காக்கும் சிலாங்கூர் மாநில பெரிக்கத்தான் நேஷனல்
தலைவர்களின் போக்கை கண்டிக்கும் வகையில் அமிருடின்
தலைமையிலான மாநில அரசுக்கு தமது ஆதரவை புலப்படுத்துவதாக
அப்துல் ரஷிட் கடந்த மார் 6ஆம் தேதி அறிவித்திருந்தார்.
இந்த முடிவினை தாம் சுயமாக எடுத்ததாக அறிக்கை ஒன்றில்
கூறியிருந்த ரஷிட், அந்த கூட்டணியின் நடவடிக்கை இஸ்லாத்தைச்
சேர்ந்த மலாய்க்காரர்களின் கோட்பாட்டிற்கு முரணமாகவும் உள்ளதாகத்
தெரிவித்திருந்தார்.
வளர்ச்சி மற்றும் மக்கள் நலனை இலக்காகக் கொண்டு அமிருடின்
தலைமையிலான மாநில அரசு சரியான தடத்தில் பயணிப்பதாக மேன்மை
தங்கிய சிலாங்கூர் சுல்தான் பாராட்டுத் தெரிவித்திருந்ததைக் கருத்தில்
கொண்டும் தாம் இந்த முடிவை எடுத்ததாக ரஷட் குறிப்பிட்டிருந்தார்.




