ஜோகூர் பாரு, மார்ச் 18 - ஆறு மாதக் குழந்தையான முகமது உவாய்ஸ்
முகமது கைருளின் மரணத்திற்கு அக்குழந்தையின் கழுத்தில் அவரின்
தாயாரால் ஏற்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் காயமே காரணம் என்பதை
போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் நிகழ்ந்த போது அக்குழந்தை வீட்டின் வரவேற்புக் கூடத்தில்
இருந்ததாக ஸ்ரீ ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன்
முகமது சோஹாய்மி இஷாக் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக அண்டை
வீட்டுக்காரர் ஒருவர் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளார் என்று
பெர்னாமாவிடம் அவர் சொன்னார்.
எனினும், இந்த அடாதச் செயலைப் புரிந்த அந்த குழந்தையின் தாயாருக்கு
மனநலப் பிரச்சனை உள்ளதா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்து
விட்டார்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக அந்த பெண்மணி
ஏழு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும்
தெரிவித்தார்.
அந்த பெண்ணை எதிர்வரும் மார்ச் 23ஆம் தேதி வரை தடுத்து வைப்பதற்கான
அனுமதியை மாஜிஸ்திரேட் சுஹைலி சாபுன் தம்போய், பெர்மாய்
மருத்துவமனையில் வழங்கினார்.
தன் குழந்தையின் கழுத்தை அறுத்த அந்த பெண் இரத்த வெள்ளத்தில்
கிடக்கும் அக்குழந்தையின் படத்தை புலனம் மூலம் தன் கணவருக்கு
அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
அக்குழந்தையின் கழுத்தை அறுப்பதற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும்
கத்தியை தாங்கள் சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றியதாக முகமது
சோஹைலி தெரிவித்தார்.




