ஈப்போ, மார்ச் 11- இங்கு மஞ்சோயில் உள்ள மைடின் பேரங்காடியில்
நேற்று தீ விபத்து ஏற்பட்டது. நள்ளிரவுவாக்கில் தீ கட்டுப்பாட்டிற்குள்
கொண்டு வரப்பட்ட வேளையில் தீயை முழுமையாக அணைக்கும்
முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தீவிபத்தில் காயம் அல்லது உயிருடச்சேதம் ஏற்பட்டது தொடர்பில்
இதுவரை தாங்கள் புகார் எதனையும் பெறவில்லை என்று பேராக் மாநில
தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் சயானி சைடோன்
கூறினார்.
தற்போதைய நிலவரப்படி நாங்கள் தீயை அணைக்கும் பணியில்
ஈடுபட்டுள்ளோம். தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில்
தீயை முழுமையாக அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.
தீயின் தீவிரம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு விட்டது என்பதை
மட்டுமே இப்போதைக்கு கூற முடியும் என்று அவர் செய்தியாளர்களிடம்
தெரிவித்தார்.
இந்த தீவிபத்து தொடர்பில் நேற்றிரவு 7.09 மணிக்கு தங்களுக்கு தகவல்
கிடைத்ததாக பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின்
நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் சபாரோட்ஸி நோர் அகமது
கூறியிருந்தார்.
பிரதான சுயிஸ் அறையில் ஏற்பட்ட தீ அந்த பேரங்காடியின் மேல்
மாடிக்கும் பரவியதாக எங்களிடம் தெரிவிக்கப்பட்டது என்று அவர்
குறிப்பிட்டார்.
இந்த பேராங்காடியில் ஏற்பட்டத் தீயை அணைக்கும் முயற்சியில்
தீயணைப்புத் துறை, மலேசிய தன்னார்வலர் துறை (ரேலா), மலேசிய
பொது தற்காப்பு படை (ஏ.பி.எம்.) ஆகியவற்றைச் சேர்ந்த 123
உறுப்பினர்களும் அதிகாரிகளும் பங்கு கொண்டதாகச் சயானி கூறினார்.
மொத்தம் 100x100 அடி பரப்பளவிலான அந்த இரட்டை மாடிக் கட்டிடத்தில்
உடைகள் மற்றும் பல்வேறு பொருள்கள் நிரம்பியுள்ளதால் தீயை
அணைக்கும் பணி முற்றுப் பெற கால தாமதம் ஏற்படும் சாத்தியம்
உள்ளது என்றும் அவர் சொன்னார்.




