ஷா ஆலம் . மார்ச் 7. நேற்று மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தின் இடைவேளையில் நடந்த கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பில் சமூகப் பொருளாதார மேம்பாடு, சமூக நலன், தொழிலாளர் ஆற்றல் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டுவுடன் கோத்தா டாமன்சாரா சட்டமன்ற உறுப்பினர் இசூவான் காசிம், வீடமைப்பு மற்றும் கலாச்சாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் புர்ஹான் அமாட் ஷா மாநில வீட்டுவசதி துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அக் கூட்டத்தில் கம்பம் பூங்கா ராயா நீண்ட வீடுகளின் பிரச்சனையில் மாநில அரசு பரிவாக நடந்து வந்துள்ளது. இந்த பிரச்சனையை அரசியல் கண்கொண்டு பார்க்காமல் குடிசைவாசிகளின் இன்னல் தீர அனைவரும் ஒத்துழைப்போம் வாருங்கள் எனச் சட்டமன்ற உறுப்பினர் இசூவான் காசிம் வேண்டுகோள் விடுத்தார்.
சட்டமன்ற உறுப்பினர் மேலும் கூறியதாவது கம்பம் பூங்கா ராயா குடிசைகள் விவகாரம் 20 ஆண்டுக்கு மேற்பட்ட விவகாரம். அவர்களுடன் ஒப்பந்தத்தில் ஈடுபட்ட மேம்பாட்டாளர் திவாலானதால் ஏற்பட்ட இடையூறு இது என்றார்.
அனைவருக்கும் நீதி வேண்டி நீதிமன்றம் சென்ற விவகாரத்தில் குடிசைவாசிகளுக்கு சட்ட உதவி வழங்க இத்தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் நடவடிக்கை எடுத்து வந்துள்ளார். ஆர்.சிவராசவின் உதவியில் சட்ட உதவியாளர்களை குடியிருப்பாளர்கள் பெற்றுள்ளனர்.
நீதிமன்றப் போராட்டங்கள் தோல்வி கண்டபின், வீடுகள் உடைப்பதற்கான காலக்கெடுவை மூன்று முறை ஒத்திவைக்க மேம்பாட்டாளர் வற்புறுத்தப் பட்டார் எனத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இசூவான் காசிம் கூறினார்.
அங்கே ஆரம்ப காலத்தில் வாழ்ந்த 29 நீண்ட வீடு வாசிகளுக்கு மட்டுமின்றி அவர்களின் வழித்தோன்றல்களுக்கும் மாநில அரசு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் சுமார் 120 வீடுகள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக மாநில வீட்டு வசதித்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் பொர்ஹான் கூறினார்.
இந்த விவகாரத்தை சுமூகமாக தீர்க்க, தான் முயற்சி எடுத்துக் கொண்டதாகவும் கடந்த ஜனவரி 5 ந் தேதி தனது அலுவலகத்தில் நீண்டவீட்டில் வசித்தவர்கள் அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இசூவான் காசிம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சிவராசா மற்றும் வீட்டுவசதித்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில் மாற்று வீடுகளுக்கு ஒப்புக் கொண்டபடி விருப்ப மனுவை சமர்ப்பித்த 30 பேருக்கு வீடுகள் வழங்க பட்டிருப்பதாகவும் கூறினார்.
ஏற்கனவே ஏற்பாடு செய்தப்படி, எஞ்சியர்களிடமிருந்தும் விண்ணப்பம் வந்தால் முறையாகப் பரிசீலிக்கப்படும் என்று அந்த கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பில் சமூகப் பொருளாதார மேம்பாடு, சமூக நலன், தொழிலாளர் ஆற்றல் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பா ராய்டு கூறினார்.








