ஷா ஆலம், மார்ச் 8 - சிலாங்கூர் மாநிலத்தில் திறந்த வெளி தீயிடல்
சம்பவங்கள் கவலையளிக்கும் வகையில் உள்ளதோடு இவ்விவகாரத்தில்
கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது
என்று மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தலைமை
இயக்குநர் டத்தோ நோர் ஹிஷாம் முகமது கூறினார்.
இவ்வாண்டின் முதல் இரு மாதங்களில் மட்டும் தோட்டங்கள், காடுகள்,
புதர்கள், சதுப்பு நிலப்பகுதிகள் மற்றும் குப்பை எரிப்பு பகுதிகளை
உள்ளடக்கிய 283 திறந்தவெளி தீயிடல் சம்பவங்கள் பதிவாகின என்று
அவர் சொன்னார்.
இக்காலக்கட்டத்தில் தோட்டங்களில் 26 திறந்தவெளி தீயிடல் சம்பவங்கள்
நிகழ்ந்த வேளையில் காடுகளில் 40 சம்பவங்களும் புதர்களில் 112
சம்பவங்களும் சதுப்பு நிலப்பகுதிகளில் இரு சம்பவங்களும் குப்பை எரிப்பு
மையங்களில் 103 சம்பவங்களும் பதிவாகின என்றார் அவர்.
தற்போதைய வறட்சி மற்றும் வெப்ப காலத்தில் இத்தகைய சம்பவங்கள்
அதிகம் நிகழலாம் என நாங்கள் அஞ்சுகிறோம் என்று நேற்று இங்கு
நடைபெற்ற சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின்
சிறந்த ஊழியர்களுக்கான விருதளிப்பு கலந்து கொண்டப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
புதிய விவசாய நிலங்கள் திறக்கப்படும் காரணத்தால் தோட்டங்கள்,
காடுகள் மற்றும் புதர்கள் சம்பந்தப்பட்ட திறந்தவெளி தீயிடல் சம்பவங்கள்
அதிகம் நிகழ்கின்றன. எல்லை கடந்த புகைமூட்டப் பிரச்சனைக்குத் தீர்வு
முயற்சிகளுக்கு இதனால் பாதிப்பு ஏற்படும் என்பதால் இத்தகைய
சம்பவங்களை தடுத்து நிறுத்துவதில் அனைத்து தரப்பினரும்
ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
சிலாங்கூர் மாநிலத்தைப் பொறுத்த வரை கோல லங்காட் செலத்தான்
மற்றும் உத்தாரா பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி, கம்போங் ஜோஹான்
செத்தியா மற்றும் ராஜா மூடா மூசா பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி
ஆகியவை தீச்சம்பவம் அதிகம் நிகழும் சாத்தியம் உள்ள பகுதிகளாக
அடையாளம் காணப்பட்டுள்ளன என்றார் அவர்.




