கோலாலம்பூர், மார்ச் 8 - கடந்த திங்கள்கிழமை தொடங்கி (மார்ச் 4) நேற்று
முன்தினம் வரை நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு ஓப்
தாப்பிஸ் 2 சோதனை நடவடிக்கையில் பல்வேறு போதைப் பொருள்
குற்றங்களுக்காக 5,041 பேர் கைது செய்யப்பட்டதோடு அவர்களிடமிருந்து
324,000 வெள்ளி மதிப்புள்ள போதைப் பொருள்களும் பறிமுதல்
செய்யப்பட்டன.
நாடு முழுவதும் உள்ள 3,727 இடங்களில் இந்த சோதனை நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டதாகப் புக்கிட் அமான் போதைப் பொருள் குற்றத் தடுப்பு
விசாரணைப் பிரிவின் இயக்குநர் டத்தோ காவ் கோக் சின் கூறினார்.
பெல்டா, பெல்கிரா குடியேற்றப்பகுதிகள், மக்கள் குடியிருப்பு பகுதிகள்
(பி.பி.ஆர்.) மீனவக் கிராமங்களை உள்ளடக்கிய இந்த சோதனை
நடவடிக்கையில் மொத்தம் 2,340 காவல் துறை அதிகாரிகள் பங்கு
கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கையின் போது 5,352 பேர் சோதனையிடப்பட்டு பல்வேறு
குற்றங்களுக்காக 14 முதல் 80 வயது வரையிலான 5,041 பேர் கைது
செய்யப்பட்டனர் என்று அவர் சொன்னார்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒரு அரசு ஊழியர் மற்றும் ஒரு மாணவர்
உள்பட 497 பேர் போதைப் பொருளை கடத்துவோர் அல்லது விநியோகம்
செய்வோர் ஆவர். மேலும் 2,855 பேர் போதைப் பித்தர்கள். இது தவிர
போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் தேடப்படுவோர் பட்டியலில்
இருந்த 186 பேரும் இதர குற்றங்களுக்காக 1,503 பேரும் கைது
செய்யப்பட்டனர் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையில் 2.6 கிலோ ஹெரோயின், 2.6 கிலோ ஷாபு, 400
கிராம் கெத்தாமின், 1.1 கிலோ கஞ்சா, 400 கிராம் எர்மின் 5 மாத்திரைகள்,
7.1 கிலோ எக்ஸ்டசி பவுடர், 20.9 கிலோ கெத்தும் இலைகள் மற்றும் 625 லிட்டர் கெத்தும் சாறு ஆகியவை கைப்பற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 870,039 வெள்ளி மதிப்புள்ள
பொருள்களும் ரொக்கமும் கைப்பற்றப்பட்டன. அவற்றில் வாகனங்கள்,
நகைகள் மற்றும் கைக்கடிகாரம் ஆகியவையும் அடங்கும் என்றார் அவர்.




