சிபு, மார்ச் 8 - ஐவர் பயணம் செய்த படகு மூழ்கிய சம்பவத்தில் ஒருவர்
மீட்கப்பட்ட வேளையில் மேலும் நால்வர் காணாமல் போயினர்.
இச்சம்பவம் காப்பிட், சுங்கை பாத்தாங் பாலே ஆற்றில் லெபோங் பாலே
தேசியப் பள்ளியின் அருகே நேற்று மாலை நிகழ்ந்தது.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மோசஸ் ங்காவ் (வயது 47) என்ற நபர்
மீட்கப்பட்ட வேளையில் மேலும் நால்வர் தொடர்ந்து தேடப்பட்டு
வருவதாகச் சிபு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் எண்டி அலி
கூறினார்.
காணாமல் போனவர்கள் பற்றிய மேல் விபரங்களைப் பெறும்
நடவடிக்கையில் தாங்கள் ஈடுபட்டு வருவதாக அவர் பெர்னாமாவுக்கு
அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்
இந்த படகு விபத்து தொடர்பில் நேற்று மாலை 5.25 மணியளவில் தகவல்
கிடைத்ததைத் தொடர்ந்து காப்பிட் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த
குழுவினர் மாலை 5.45 மணியளவில் சம்பவத்தை அடைந்ததாக அவர்
சொன்னார்.
நேற்று மாலை 5.00 மணியளவில் ஐவர் பயணம் செய்த ஃபைபர் இயந்திரப்
படகு நீரில் மூழ்கியதைக் கண்ட நபர் ஒருவர் தங்களுக்குத் தகவல்
தெரிவித்தார் என்றார் அவர்.
தீயணைப்புக் குழுவினர் சம்பவ இடத்தில் தொடக்க மதிபீட்டைச்
செய்ததோடு மீட்கப்பட்ட நபர் மற்றும் சாட்சிகளிடமிருந்து தகவல்களையும்
திரட்டியதாக அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட நபர்கள் கடைசியாக காணப்பட்ட பகுதியிலிருந்து ஒரு
கிலோ மீட்டர் சுற்றளவில் தேடுதல் நடவடிக்கையை தீயணைப்பு வீரர்கள்
மேற்கொண்டதாகக் கூறிய அவர், இருள் மற்றும் வேகமான நீரோட்டம் காரணமாக நேற்று மாலை 6.50 மணியளவில் தேடும் பணி நிறுத்தப்பட்டது என்றார்.




