NATIONAL

பெர்லிஸ் ராஜாவுக்கு எதிராக முகநூலில் அவதூறு - நண்டு வியாபாரிக்கு மூன்று நாள் தடுப்புக் காவல்

7 மார்ச் 2024, 10:02 AM
பெர்லிஸ் ராஜாவுக்கு எதிராக முகநூலில் அவதூறு - நண்டு வியாபாரிக்கு மூன்று நாள் தடுப்புக் காவல்

கங்கார், மார்ச் 7- பெர்லிஸ் ராஜா துங்கு சிராஜூடின் ஜமாலுல்லாயிலை அவமதிக்கும் வகையில் கருத்துகளை முகநூலில் பதிவேற்றம் செய்தது தொடர்பான விசாரணைக்கு உதவும் பொருட்டு நண்டு வியாபாரி ஒருவர் இன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளான்.

நாற்பத்தோரு வயதுடைய அந்த ஆடவருக்கு எதிரான தடுப்புக் காவல் அனுமதியை கங்கார்  நீதிமன்ற மாஜிஸ்திரேட் அனா ரோஸானா முகமது நோர் வழங்கியதாக கங்கார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி யுஷாரிபுடின் முகமது யூசுப் கூறினார்.

முப்பத்தேழு வயதுடைய ஆடவர் ஒருவரிடமிருந்து கிடைத்த புகாரைத் தொடர்ந்து பெர்லிஸ் மாநில போலீஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவு டி9 குழு ஒன்று அந்த சந்தேகப் பேர்வழி சங்லுன் தாமான் அக்சியா 2இல் இன்று விடியற்காலை 1.30 மணியளவில் கைது செய்ததாக அவர் சொன்னார்.

சம்பந்தப்பட்ட புகார்தாரர் பேஸ்புக் பக்கத்தை பார்வையிட்டுக் கொண்டிருந்த போது பெர்லிஸ் ராஜாவை களங்கப்படுத்தும் வகையிலான பதிவு ஒன்றைக் கண்டு உடனடியாகப் போலீசில் புகார் செய்ததாக அவர் தெரிவித்தார்.

இந்த புகார் தொடர்பில் 1998ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லுடகச் சட்டம் மற்றும் 1948ஆம் ஆண்டு நிந்தனைச் சட்டத்தின் 4(1)வது பிரிவு ஆகியவற்றின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த செவ்வாய்க்கிழமை பெர்லிஸ் ராஜாவின் படம் பொறிக்கப்பட்ட பதாகை ஒன்று சிவப்பு சாயம் வீசி சேதப்படுத்தப்பட்டது தொடர்பில் தாங்கள் புகாரைப் பெற்றுள்ளதாகவும் அவர் சொன்னார்.

இச்சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 427வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.