ஷா ஆலம், மார்ச் 7: கடந்த திங்கட்கிழமை செத்தியா ஆலமில் உள்ள குழந்தை பராமரிப்பு மையத்தில் இருந்தபோது மூன்று மாத ஆண் குழந்தை இறந்தது.
பிற்பகல் 3.31 மணிக்குக் குழந்தையின் தந்தையிடமிருந்து இந்த சம்பவம் குறித்து தனது தரப்புக்கு புகார் கிடைத்தது என ஷா ஆலம் மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி முகமட் இக்பால் இப்ராஹிம் கூறினார்.
அக்குழந்தையின் தந்தை தனது மகனை முதல் முறையாக காலை 8.30 மணியளவில் அத்தினப்பராமரிப்பு மையத்திற்கு அனுப்பியதாகவும், இரண்டு மணி நேரம் கழித்து அக்குழந்தை சுயநினைவின்றி இருப்பதாக அவருக்குத் தகவல் கிடைத்ததாகவும் கூறினார்.
"அக்குழந்தை சுயநினைவற்ற நிலையில் ஷா ஆலம் மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டது மற்றும் காப்பாற்றும் முயற்சி பயனளிக்காமல் இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது.
"ஷா ஆலம் மருத்துவமனை தடயவியல் பிரிவில் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. மேல் நடவடிக்கையை தொடர ஆய்வக அறிக்கைக்காக காவல்துறை காத்திருக்கிறது" என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
ஆரம்பப் பரிசோதனையில் வெளிப்புற அல்லது உட்புற காயங்களுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று முகமட் இக்பால் கூறினார்.
குழந்தைகள் சட்டப் பிரிவு 31(1)(a) இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் RM50,000 அபராதம் அல்லது 20 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப் படலாம்.
- பெர்னாமா




