கோலாலம்பூர், மார்ச் 7- தலைநகர் வட்டாரத்தில் மின்கம்பிகளைத் திருடி
வந்ததாகச் சந்தேகிக்கப்படும் “டின் பெரிங்கின்“ என்ற ஆடவரை போலீசார்
கைது செய்துள்ளனர்.
கடந்த மாதம் 28ஆம் தேதி இங்குள்ள தாமான் பெலாங்கியுள்ள ஆலை
ஒன்றில் மின்கம்பிகள் களவு போனது தொடர்பில் கிடைத்த புகாரின்
பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் பயனாகக் கடந்த
ஞாயிற்றுக்கிழமை ஜிஞ்சாங் உத்தாராவில் 40 வயதுடைய ஆடவரை
தாங்கள் கைது செய்ததாகச் செந்துல் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி
அகமது சுக்கார்னோ முகமது ஜஹாரி கூறினார்.
இந்த கைது நடவடிக்கையின் பலனாக மாநகர் வட்டாரத்தில் நிகழ்ந்த
ஒன்பது மின்கம்பி திருட்டுச் சம்பவங்களுக்குத் தீர்வு காண முடியும் எனத்
தாங்கள் நம்புவதாக அவர் சொன்னார்.
குடியிருப்புகள் மற்றும் கட்டுமானப் பகுதிகளில் உள்ள மின்கம்பிகள்,
தாமிரம் மற்றும் அலுமினியப் பொருள்களை இலக்காக கொண்ட
இக்கும்பல் கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் முதல் தீவிரமாகச் செயல்பட்டு
வந்ததாகக் கூறிய அவர், இக்கும்பலைச் சேர்ந்த மற்றொரு நபரை தாங்கள்
தேடி வருவதாக இன்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில்
குறிப்பிட்டார்.
திருடப்படும் பொருள்களை போதைப் பொருளை வாங்குவதற்காக பழைய
உலோகப் பொருள் கடைகளில் விற்பது இக்கும்பலின் வழக்கமான
நடவடிக்கையாகும். சேமிப்பில் வைக்கப்பட்டிருக்கும் சுருள் கேபிள்களை
இலக்காகக் கொண்டு இக்கும்பல் கொள்ளையிட்டு வந்துள்ளது
விசாரணையில் தெரியவந்தது என்றார் அவர்.
இதனிடையே, செந்துல் வட்டாரத்தில் வழிப்பறி கொள்ளைகளில் ஈடுபட்டு
வந்ததாக சந்தேகிக்கப்படும் கேங் டாட்டான் கும்பலின் தலைவனை தாங்கள் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்தாகச் சுகார்னோ தெரிவித்தார்.
கைதான நபரை விசாரணைக்காக எதிர்வரும் மார்ச் 9ஆம் தேதி வரை தடுத்து
வைத்துள்ளதாகக் கூறிய அவர், இக்கும்பலின் மற்றொரு உறுப்பினரை தேடி
வருவதாகச் சொன்னார்.




