ஷா ஆலம், மார்ச் 7- மந்திரி புசார் தலைமைத்துவத்திற்குப் பெரிக்கத்தான்
நேஷனல் கூட்டணியைச் சேர்ந்த செலாட் கிள்ளான் உறுப்பினர் ஆதரவு
தெரிவித்திருப்பது சிலாங்கூர் மாநில அரசு நிர்வாகம் சரியான தடத்தில்
பயணிப்பதை காட்டுகிறது என்று அரசாங்க ஆதரவு சட்டமன்ற
உறுப்பினர்கள் பிரிவு (பி.பி.சி.) கூறியது.
மக்களுக்கு மேலும் சிறப்பான எதிர்காலத்தை உருவாக்க அப்துல் ரஷிட்
விரும்புவதை அவரின் இந்த நடவடிக்கை காட்டுகிறது என்று அப்பிரிவின்
தலைவர் அஸ்மிஸாம் ஜமான்ஹூரி கூறினார்.
ஒற்றுமைக்காகவும் அனைவரின் சுபிட்சத்திற்காகவும் அரசியல்
வேறுபாடுகளை மறந்து சட்டமன்றத்திலும், சட்டமன்றத்திற்கு வெளியிலும்
அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபட்டு செயல்படுவதை பி.பி.சி.
வரவேற்கிறது என்று அவர் சொன்னார்.
மலாய் ஆட்சியாளர்களுக்கு எதிராக பரப்பப்படும் ஆதாரமற்றக்
குற்றச்சாட்டுகள் பரப்பப்படும் விவகாரத்தில் மௌனம் சாதிக்கும்
சிலாங்கூர் மாநிலப் பெரிக்கத்தான் நேஷனல் போக்கின் காரணமாகத் தாம்
மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமைத்துவத்திற்கு ஆதரவு
வழங்குவதாக அப்துல் ரஷிட் நேற்று கூறியிருந்தார்.
இது தாம் சுயவிருப்பத்தின் பேரில் எடுத்த முடிவு எனக் கூறிய அவர்,
பெரிக்கத்தான் கூட்டணியின் இந்த நிலைப்பாடு இஸ்லாமிய மதத்தைச்
சேர்ந்த மலாய்க்காரர்களின் கோட்டுபாடுகளுக்கு எதிராகவும் உள்ளது
என்று குறிப்பிட்டிருந்தார்.




