கோலாலம்பூர், மார்ச் 7- நாட்டிற்குச் சுற்றுப்பயணிகள் வருகை மற்றும்
வறட்சியை எதிர்கொள்வதற்கான தயார் நிலை உள்ளிட்ட விவகாரங்கள்
இன்றைய மக்களவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
நாட்டிற்கு வரும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும்
பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் வாடகை விமானச் சேவையின்
பங்களிப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து சுற்றுலா,
கலை மற்றும் கலாசாரத் துறை அமைச்சரிடம் பாங்கி தொகுதி
பக்கத்தான் ஹராப்பான் உறுப்பினர் ஷியாரெட்ஸான் ஜோஹான்
கேள்வியெழுப்புவார்.
பல இடங்களில் நீர் விநியோகப் பற்றாக்குறை ஏற்படுவதற்கு காரணமாக
விளங்கும் வறட்சி நிலையின் விளைவுகள் குறித்து ரந்தாவ் பாஞ்சாங்
தொகுதி பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் டத்தோ சித்தி ஜைய்லா
முகமது யூசுப் எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் உருமாற்றத் துறை
அமைச்சரிடம் கேள்வியெழுப்புவார்.
வறட்சி நிலையை எதிர்கொள்வதற்காக அரசு நிறுவனங்களுக்கிடையில்
ஏற்படுத்தப்பட்ட ஒத்துழைப்பு செயல்முறை குறித்தும் வறட்சி காலத்தின்
போது பயன்படுத்துவதற்கு ஏதுவாக வெள்ள நீரை சேகரிக்கும் வழிகள்
குறித்தும் அவர் கேட்டறிவார்.
பூமிபுத்ராக்களின் சமூக பொருளாதார நிலையை உயர்த்தும் நோக்கில்
நடத்தப்பட்ட 2024 பூமிபுத்ரா பொருளாதார மாநாட்டின் பயனாக
முன்னெடுக்கப்படும் இலக்குகள் மற்றும் அணுகுமுறைகள் குறித்து
பொருளாதார அமைச்சரிடம் வங்சா மாஜூ பக்கத்தான் ஹராப்பான்
உறுப்பினர் ஜாஹிட் ஹசான் வினா தொடுப்பார்.
அத்தியாவசிய உணவுப் பொருள் விநியோகம் மற்றும் விலை தொடர்பான
புகார் தளங்களில் பொது மக்களின் பங்கேற்பு குறித்து உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சரிடம் தம்பின் தொகுதி பாரிசான் உறுப்பினர் டத்தோ முகமது இசாம் முகமது ஈசா வினவுவார்.




