கோலாலம்பூர், மார்ச் 6 - ஆஸ்திரேலிய நிறுவனங்கள் 2,450 கோடி
வெள்ளியை (517 கோடி அமெரிக்க டாலர்) முதலீடு செய்யும் என்று
மலேசியா எதிர்பார்ப்பதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை
மேற்கோள் காட்டி பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் தரவு மைய நடத்துநர்களான ஏர்டிரங்க் மற்றும்
நெக்ஸ்ட் டிசி ஆகிய நிறுவனங்கள் முறையே 1,100 கோடி வெள்ளி
மற்றும் 300 கோடி வெள்ளியை முதலீடு செய்யும் என எதிர்பார்க்கப்படும்
வேளையில் சுரங்க நிறுவனமான லைனாஸ் ரேர் ஏர்த்ஸ் நிறுவனம்
மலேசியாவிலுள்ள தனது வர்த்தக நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் என
அன்வார் கூறினார்.
ஆஸ்திரேலியாவுக்கான பணி நிமித்த வருகையின் போது நிருபர்களிடம்
இத்தகவலை வெளியிட்டதாக அச்செய்தி நிறுவனம் குறிப்பட்டது.
எனினும், இந்த முதலீட்டுத் திட்டங்களுக்கான கால வரம்பு எதனையும்
அது குறிப்பிடவில்லை.
இந்த முதலீட்டு வாய்ப்புகள் மூலம் தேர்ச்சி பெற்ற 1,200 மலேசியர்களுக்கு
வேலை வாய்ப்பு கிட்டும் என எதிர்பார்க்கப்படுவதாகப் பிரதமர் தெரிவித்தார்.
இதனிடையே, சி.என்.பி.சி. தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த முதலீடு,
வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜப்ருள்
அப்துல் அஜிஸ், இந்த பயணத்தின் போது தாங்கள் 20 ஆஸ்திரேலிய
நிறுவனங்களைச் சந்தித்தாகவும் அவற்றில் எட்டு நிறுவனங்கள் 338 கோடி
அமெரிக்க டாலர் மதிப்புள்ள முதலீடுகளைச் செய்ய
உறுதியளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.




