கோலாலம்பூர், மார்ச் 6 - மலேசியர்களுக்கு நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சேவை வரி உயர்வு உள்ளிட்ட வரிகளின் அமலாக்கம் குறித்து ஆய்வு செய்யுமாறு அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிய சேவை வரி விகிதம் மற்றும் ஆடம்பர வரி ஆகியவை வணிகத்துறைகள் மற்றும் பயனீட்டாளர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை மதிப்பிடுவதற்கு ஆய்வினை மேற்கொள்ளுமாறு பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டார்.
இந்த வரி விதிப்பு வணிகத் துறைக்கும் பயனீட்டாளர்களுக்கும் நிதிச் சுமையை ஏற்படுத்தினால் நிச்சயமற்ற பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு நாம் அதைத் தற்காலிகமாக ஒத்திவைக்கலாம். ஆண்டின் இறுதியில் பொருளாதாரம் மீண்டு வரும் என்பதையும் இரண்டாவது காலாண்டில் ரிங்கிட்டின் மதிப்பு உயரும் என்பதையும் நாங்கள் அறிவோம்.
எனவே, புதிய சேவை வரி விகிதம் எட்டு சதவிகிதம் கவனத்தில் கொள்ளப்பட்டு மறுபரிசீலனை செய்யப்படும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் மக்களவையில் நேற்று அரச உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது கூறினார்.
இதனிடையே, சேவை வரி விகிதத்தை உயர்த்துவதற்குப் பதிலாக பொருள் மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) மீண்டும் அறிமுகப்படுத்துவது அரசுக்கு நல்லது என்று கினாபத்தாங்கன் உறுப்பினர் டத்தோஸ்ரீ புங் மொக்தார் ராடின் தெரிவித்தார்.
சேவை வரி விகிதம் இரண்டு விழுக்காடு அதிகரிக்கிறது. ஆனால், அரசாங்க வசூல் 300 கோடி வெள்ளி மட்டுமே உயர்கிறது. ஆகவே, நாம் உண்மையில் அதிக பணத்தை ஈட்ட விரும்பினால் ஜி.எஸ்.டி. தந்திரத்தைக் கையாளலாம். அதே நேரத்தில் இலக்கு மானியங்களை அமல்படுத்தலாம். இதன் மூலம் அரசாங்கம் பல கோடி வெள்ளியைச் சேமிக்க இயலும் என்று அவர் கூறினார்.




