கோல சிலாங்கூர், மார்ச் 6 - மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனத்திற்குச்
(எம்.எம்.இ.ஏ.) சொந்தமான ஹெலிகாப்டர் பூலாவ் அங்காசா கடல்பகுதியில்
அவசரமாக இறங்கியதைக் கண்ட ஒருவர் சமயோசிதமாக 999 என்ற
எண்களில் உடனடியாகத் தொடர்பு கொண்டு கொடுத்தத் தகவல் மீட்புப்
பணிகளை விரைவாக மேற்கொள்வதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தியது.
தாமும் ஏழு சக நண்பர்களும் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது
தாழ்வாக பறந்த ஹெலிகாப்படர் ஒன்று சுழன்றவாறு கடலில் விழுவதைக்
கண்டு தாங்கள் அதிர்ச்சியடைந்ததாக முகமது ரிட்வான் குலுப் அகமது
(வயது 38) கூறினார்.
நான் உடனடியாக 999 என்ற எண்களைத் தொடர்பு கொண்டு ஹெலிகாப்டர்
விபத்துக்குள்ளானத் தகவலைத் தெரிவித்தேன் என்றார் அவர்.
தகவல் தெரிவித்த சிறிது நேரத்தில் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு
விரைந்து ஹெலிகாப்டரில் சிக்கியிருந்தவர்களைக் காப்பாற்றினர் என்று
அவர் மேலும் சொன்னார்.
இந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாவதை காட்டும் காணொளி சமூக
ஊடகங்களில் நேற்று பரவலாகப் பகிரப்பட்டது. மலேசிய கடல்சார்
அமலாக்க நிறுவனத்திற்குச் சொந்தமான ஏ.டபள்யு.139 ஹெலிகாப்டர்
பூலாங் அங்காசா அருகே விபத்துக்குள்ளானதை எம்.எம்.இ.ஏ. தலைமை
இயக்குநர் அட்மிரல் டத்தோ ஹமிட் முகமது அமின் உறுதிப்படுத்தினார்.
அந்த ஹெலிகாப்டரில் பயணித்த நால்வரும் தெய்வாதீனமாக
உயிர்த்தப்பினர். தேடுதல் மீட்பு நடவடிக்கை மலேசிய சிவில் வான்
போக்குவரத்து முகமை மற்றும் புத்ரா ஜெயா கடல்சார் மீட்பு
ஒருங்கிணைப்பு மையத்துடன் இணைந்து நேற்று காலை 10.15 மணிளவில்
மேற்கொள்ளப்பட்டது.




