கோலாலம்பூர், மார்ச் 5 - இன்றைய மக்களவைக் கூட்டத்தில் தொழில்நுட்ப
மற்றும் தொழில் கல்வி, லாபுவானில் குடிநீர் மற்றும் மின்சார
விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல், முற்போக்கு வரி விதிப்பு மாற்றுத்
திட்டங்கள் உள்ளிட்ட விவாதங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மேலும் அதிகமான நிபுணர்களையும் தொழில்நுட்பர்களையும்
உருவாக்குவதற்கு ஏதுவாக திவேட் திட்டத்தை வலுப்படுத்துவதற்கான
அரசாங்கத்தின் திட்டங்கள் மற்றும் அணுகுமுறைகள் குறித்து பெக்கான்
தொகுதி உறுப்பினர் டத்தோஸ்ரீ ஷ் முகமது புஸி அலி கிராம மற்றும்
வட்டார மேம்பாட்டு அமைச்சரிடம் கேள்வியெழுப்புவார் என்று
நாடாளுமன்ற அகப்பக்கத்தில் வெளியிட்டப்பட்டுள்ள ஒழுங்கு முறை
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
லபுவானில் மோசமடைந்து வரும் நீர் மற்றும் மின் விநியோகப் பிரச்சனை
முதலீடுகளைப் பாதிக்கும் வகையில் உள்ளதால் அப்பிரச்சனைக்கு
எப்போது தீர்வு காணப்படும் என்று லபுவான் உறுப்பினர் டத்தோ டாக்டர்
சுஹாலி அப்துல் ரஹ்மான் பிரதமரிடம் கேள்வியெழுப்புவார்.
ஜி.எஸ்.டி.யை அறிமுகப்படுத்துவதற்கு முன் பற்றாக்குறையை நிர்வத்தி
செய்யும் முயற்சியாகத் தேசிய வருமானத்தை பல்வகைப்படுத்தவும்
பெருக்கவும் பரம்பரை சொத்து வரி, மூலதன ஆதாய வரி, முற்போக்கு
வரி விதிப்புக்கான அரசாங்கத்தின் விருப்பம் குறித்து அம்பாங் தொகுதி
உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் நிதியமைச்சரிடம் வினா தொடுப்பார்.
மடாணி அக்ரோ விற்பனைத் திட்டத்தின் கீழ் அத்தியாவசியப்
பொருள்களின் விலையைக் குறைப்பதற்கான செயல் முறை குறித்து
செம்புரோங் உறுப்பினர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் துன் ஹூசேன் விவசாய
மற்றும் உணவு உத்தரவாத அமைச்சரிடம் விளக்கம் கோருவார்.
கேள்வி பதில் அங்கத்திற்குப் பிறகு மாட்சிமை தங்கிய பேரரசரின்
உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது உறுப்பினர்கள்
உரையாற்றுவர்.




