ஈப்போ, மார்ச் 4 - ஈப்போ-லுமுட் நெடுஞ்சாலையில் சாங்காட் செர்மின் அருகே நேற்று விரைவுப் பேருந்தும் நான்கு சக்கர வாகனமும் மோதிய விபத்தில் பேருந்து ஓட்டுநரும் பயணியும் பலத்த காயமடைந்தனர்.
லுமுட்டில் இருந்து ஈப்போவுக்குச் பயணித்துக்கொண்டிருந்ததாக நம்பப்படும் அந்த விரைவுப் பேருந்தில் இருந்த மேலும் 19 பேரும் லேசான காயங்களுக்குள்ளாயினர்.
நேற்று மாலை 5.38 மணிக்கு அவசர அழைப்பு வந்ததைத் தொடர்ந்து ஆயர் தாவார் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாக பேராக் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அகமது கூறினார்.
டோயோட்டா ஹைலக்ஸ் மற்றும் விரைவு பஸ் ஆகியவை சாலை தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளாதாகக் கூறிய அவர், இதில் ஹைலக்ஸ் டிரைவருக்கும் லேசானக் காயங்கள் ஏற்பட்டன என்றார்.
இதற்கிடையில், மஞ்சோங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமது நோர்டின் அப்துல்லாவைத் தொடர்பு கொண்டபோது, லுமுட்டில் இருந்து ஈப்போவுக்குச் சென்று கொண்டிருந்த ஹைலக்ஸ் வாகனம் கவனக் குறைவாகத் தடத்தை மாற்றியது இந்த விபத்துக்குக் காரணம் என்பது ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டது என்றார்.
ஹைலக்ஸ் வாகன ஓட்டுநரின் இந்த செயலால் விரைவு பஸ் டிரைவரால் சரியான நேரத்தில் பஸ்ஸை நிறுத்த முடியவில்லை. இதனால் அந்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது என்று அவர் கூறினார்.
இந்த விபத்து தொடர்பில் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் 43 (1)வது பிரிவின் கீழ் மேலும் விசாரணை நடத்தப்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.




