NATIONAL

எம்.எச்.370 விமானத்தை தேடும் முயற்சியைத் தொடர அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படும்- அந்தோணி லோக்

4 மார்ச் 2024, 2:08 AM
எம்.எச்.370 விமானத்தை தேடும் முயற்சியைத் தொடர அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படும்- அந்தோணி லோக்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 4 - பத்து ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எம்எச் 370 விமானத்தைத் தேடும் பணியை மீண்டும் தொடங்குவதற்கு ஏதுவாக  ஓஷன் இன்பினிட்டி நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு  அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

இதற்கான அனைத்து முயற்சிகளையும் தமது அமைச்சு விரைவில்  எடுக்கும் என என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

சில புதிய ஆய்வுகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களில் சில எங்களிடம் முன்வைக்கப்பட்டன. அவற்றில் முன்னேற்றங்கள் இருப்பதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் தேடுதல் நடவடிக்கை  மூலம் விமானத்தைக் கண்டுபிடித்து பயணிகளின்  குடும்பத்தினருக்கு உண்மையைக் கண்டறிந்து கொடுக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். .

நாங்கள் உங்களுடன் (எம்எச்370 சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள்) இருக்கிறோம் என்பதை மீண்டும் கூறிக்கொள்கிறோம். இறந்தவர்களின்  குடும்பங்களுக்கு ஆதரவாகவும் ஒன்றுபட்டும்  தொடந்து இருப்போம் என்று நேற்று இங்குள்ள ஒரு வணிக வளாகத்தில் நடைபெற்ற "எம்எச்370: 10 ஆண்டுகள் கடந்தன" என்ற  நிகழ்வில் உரையாற்றிய போது அவர் தெரிவித்தார்.

ஓஷியன் இன்ஃபினிட்டி நிறுவனத்தை மலேசியாவுக்கு வரவழைத்து "கண்டுபிடிக்காவிட்டால் கட்டணமில்லை"  என்ற நிலைப்பாட்டைத் தெரிவிக்குமாறு போக்குவரத்து அமைச்சை தாம் பணித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவர்கள் பொருத்தமான தேதியை வழங்குவதற்காக நாங்கள் இப்போது காத்திருக்கிறோம். விரைவில் அவர்களை சந்திப்போம் என்று நம்புகிறேன். எம்எச்370 விமானத்தை கண்டுபிடிப்பதில் மலேசிய அரசாங்கம் உறுதியாக உள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களும் நண்பர்களும் தைரியமாக  இருப்பார்கள் என்று நம்புகிறேன். உங்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். நீங்கள் எப்போதும் எங்கள் எண்ணங்களிலும் பிரார்த்தனைகளிலும் இருப்பீர்கள். மிக முக்கியமாக, நாங்கள் உங்களுக்கு ஆதரவாக நிற்போம் என்று அவர் மேலும் கூறினார்.

பல கேள்விகளுக்கு விடை தெரியாமல், பயணிகளின் குடும்ப உறுப்பினர்களை திகைப்பில் ஆழ்த்தி தடயமே இல்லாமல் விமானம்  காணாமல் போன  சோகம் நிகழ்ந்து இந்த வெள்ளிக்கிழமையுடன் (மார்ச் 8) பத்தாண்டுகள் நிறைவடைகின்றன.

கடந்த 2014  மார்ச் 8ஆம் தேதி  இரவு  239 பேருடன் மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பெய்ஜிங்கிற்கு புறப்பட்டது. ஆனால் புறப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு ராடார் திரையில் இருந்து மறைந்தது.

அதனைத் தொடர்ந்து தென் இந்தியப் பெருங்கடலில் பல நாடுகளை உள்ளடக்கிய  தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதும் விமானத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சி  பலனளிக்கவில்லை.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.