ஷா ஆலம், மார்ச் 1: சிலாங்கூர் மாநில அரசு நிர்ணயித்த இலக்கான RM45 பில்லியனை விட கடந்த ஆண்டு மொத்தமாக RM55.3 பில்லியனை முதலீடாக ஈர்த்துள்ளது என முதலீட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை உட்படுத்திய மொத்த முதலீட்டு மதிப்பீட்டை மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையம் (மீடா) நேற்று வெளியிட்டது என இங் ஸீ ஹான் கூறினார்.
"2023 ஆம் ஆண்டிற்கான ``மீடா`` தரவுகளின் அடிப்படையில், உற்பத்தித் திட்டங்கள் அல்லது உற்பத்தித் துறை 2022 இல் RM12.2 பில்லியனைக் காட்டிலும் கடந்த ஆண்டு RM19.3 பில்லியன் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது" என்று அவர் கூறினார்.
இன்று நடைபெற்ற சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி மாநிலத்தின் முதலீட்டு நிலை குறித்து எழுப்பிய கூடுதல் கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
இதற்கிடையில், சிலாங்கூர் மாநிலத்திற்கு அதிக முதலீட்டு திறனை உருவாக்க ஒரு `செமிகொன்டாக்டர்`` மேம்பாட்டு திட்டம் அறிவிக்கப்படும் என்று ஸீ ஹான் கூறினார்.
"எதிர்காலத்தில் செமிகொன்டாக்டர் மேம்பாட்டுத் திட்டத்தை டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் மூலம் சிலாங்கூர் அறிவிக்கும், மேலும் இது மற்ற மாநிலங்களுக்கு இணையான சுற்றுச்சூழல் அமைப்பை கொண்ட மாநிலத்தை உருவாக்கும்.
"பெரும்பாலான செமிகொன்டாக்டர் முதலீடுகள் பினாங்குக்குச் செல்கின்றன, ஏனெனில் அவை முழுமையான சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்டுள்ளன. இந்த மேம்பாட்டுத் திட்டம் முதலீட்டாளர்களை ஈர்க்க உதவும் என்று நான் நம்புகிறேன்," என்று அவர் கூறினார்.




