ஷா ஆலம், மார்ச் 1- பண்ணைக்கு வெளியே தங்கள் கால்நடைகளைச்
சுற்றித் திரியவிடும் கால்நடை வளர்ப்போருக்கு விதிக்கப்படும் அபராதம்
பத்து மடங்காக அதிகரிக்கப்படும்.
இத்தகைய குற்றங்களைப் புரிவோருக்கு தற்போது விதிக்கப்படும் 1,000
வெள்ளி கூடுதல் பட்ச அபராதத் தொகையை 5,000 வெள்ளி முதல் 10,000
வெள்ளி வரை உயர்த்துவதற்கு ஏதுவாக 1971ஆம் ஆண்டு மாநில
கால்நடை கட்டுப்பாட்டுச் சட்டத்தில் திருத்தம் செய்ய மாநில அரசு
நடவடிக்கை எடுத்து வருவதாக ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் டத்தோ இங் சுயி லிம் கூறினார்.
விவசாயப் பகுதிகளுக்கு அப்பால் கால்நடைகள் சுற்றித் திரிவதை
தடுப்பதில் இந்த உயர்ந்த பட்ச அபராதத் தொகை சிறந்த
அணுகுமுறையாக விளங்கும் என்று அவர் சொன்னார்.
பொது வெளிகளில் சுற்றித் திரியும் கால்நடைகள் சாலைகளில் நுழைந்து
விபத்துகள் ஏற்படுவதற்கு காரணமாகி விடுகின்றன. ஆகவே இந்த
விவகாரத்திற்கு அதிக முக்கியத்தும் அளிக்க வேண்டும் என கருதுகிறேன்
என்று மாநில சட்டமன்றத்தில் அவர் தெரிவித்தார்.
பொது இடங்களில் சுற்றித் திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களை
அடையாளம் காண அதிகாரிகள் முயலும் போது அந்த கால்நடைகளுக்கு
உரிமை கோரி யாரும் முன்வருவதில்லை. இதனால் அமலாக்க
நடவடிக்கைகளில் சிக்கல் ஏற்படுகிறது என்றார் அவர்.
பொது இடங்களில் சுற்றித் திரியும் கால்நடைகளால் சாலை விபத்துகள்
மற்றும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு
சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிஜங்காங் உறுப்பினர் டத்தோ அகமது யூனுஸ் ஹைரி வலியுறுத்தியிருந்தது தொடர்பில் அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.
இவ்விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்துவதிலும் நடப்பு
சட்டங்களை அமல்படுத்துவதிலும் ஊராட்சி மன்ற அதிகாரிகள்
சிக்கல்களை எதிர்நோக்குவதைச் சுட்டிக்காட்டிய இங், எனினும் இத்தகைய
குற்றங்களுக்கு 10,000 வெள்ளி வரை அபராதம் விதிப்பதற்கு ஏதுவாக
நடப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சாத்தியங்களை மாநில அரசு
ஆராயும் என்றார்.




