ஷா ஆலம், மார்ச் 1- மேரு மொத்த விற்பனைச் சந்தை மற்றும் மேரு
ஹை ஸ்கூல் வட்டாரத்தில் ஏற்படும் வெள்ளப் பிரச்சனைக்கான
காரணத்தைக் கண்டறியுமாறு மூன்றாவது இலகு இரயில் திட்டத்தை
(எல்.ஆர்.டி.3) மேற்கொண்டு வரும் பிரசரானா மலேசியா நிறுவனம்
பணிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியிலுள்ள கால்வாய்கள் மற்றும் ஜாலான் மேரு முதல் சுங்கை
கிள்ளான் ஆறு வரையிலான பிரதான கால்வாய் ஆகியவற்றின் மீது
ஆய்வு மேற்கொள்வது முக்கியமாகும் என்று போக்குவரத்து துறைக்கான
ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
எல்.ஆர்.டி.3 கட்டுமானப் பணி மேற்கொள்ளப்படும் காலக்கட்டத்தில்
ஜாலான் மேரு மொத்த சந்தை மற்றும் மேரு ஹை ஸ்கூல்
வட்டாரங்கள் வெள்ளப் பாதிப்பை எதிர்நோக்கும் சம்பவங்கள் அடிக்கடி
நிகழ்ந்து வருகின்றன என்று அவர் தெரிவித்தார்.
ஆகவே, எல்.ஆர்.டி.3 தரப்பினர் கோத்தா சாலைச் சுற்றுட்டத்தில் வடிகால்
முறையை மறுஆய்வு செய்து மாறியமைக்க வேண்டும் என்பதோடு
வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான பரிந்துரைகளையும்
சமர்ப்பிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
மாநில சட்டமன்றத்தில் இன்று எல்.ஆர்.டி.3 நிர்மாணிப்புத் திட்டம்
தொடர்பில் பண்டார் பாரு கிள்ளான் தொகுதி உறுப்பினர் டாக்டர் குவா
பெங் ஃபெய் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் இங் இவ்வாறு
சொன்னார்.
இவ்வாண்டு ஜனவரி வரை எல்.ஆர்.டி.3 திட்டத்தின் நிர்மாணிப்பு பணிகள்
93.88 விழுக்காடு பூர்த்தியடைந்துள்ளதாகக் கூறிய இங், வரும் 2025ஆம்
ஆண்டு மார்ச் மாதம் இப்பணிகள் முற்றுப் பெறும் என்றார்.
அடிக்கடி வெள்ளப் பிரச்சனையை எதிர் கொள்ளும் கிள்ளான், ஹை
ஸ்கூல் எதிரில் உள்ள லோரோங் நுரியில் கால்வாய்களை தரம்
உயர்த்தும் பணியை கிள்ளான் அரச மாநகர் மன்றம் மேற்கொள்ளும்
என்றும் அவர் தெரிவித்தார்.




