கோலாலம்பூர், பிப் 29 - இவ்வாண்டிற்கான ஆயுதக் களைவு மீதான ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) மாநாட்டில் பார்வையாளராக பங்கேற்க பாலஸ்தீனம் செய்து கொண்ட விண்ணப்பத்தைச் சில நாடுகள் ஆட்சேபித்தல் குறித்து மலேசிய ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளது.
அந்த மாநாட்டின் பணி நிரலில் பங்கேற்பதற்குரிய சமமான உரிமை பாலஸ்தீனத்திற்கு உள்ளதாக மலேசிய கருதுகிறது என்று கடந்த புதன்கிழமை ஜெனிவா மாநாட்டில் 2024 ஆம் ஆண்டிற்கான மலேசியாவின் அறிக்கையை வாசித்த போது துணை வெளியுறவு அமைச்சர் டத்தோ முகமது அலாமின் கூறினார்.
ஐ.நா. மற்றும் ஆயுதக்களைவு மீதான மாநாட்டில் விவாதிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட அணுவாயுத அணி சேரா ஒப்பந்தம், உயிரியல் மற்றும் விஷ ஆயுத மாநாடு, இரசாயன ஆயுத மாநாடு ஆகிய ஒப்பந்தங்களின் பார்வையாளராகவும் பாலஸ்தீனம் இருந்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.
மாநாட்டுப் பணிகளின் உள்ளடக்கம் மற்றும் பலதரப்பு கொள்கைகளின் முக்கியத்தும் ஆகியவற்றை மலேசியா அடிக்கோடிட்டு காட்ட விரும்புகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அனைத்துலக சமூகத்தின் பரந்த அளவிலான பங்கேற்பை உறுதி செய்ய மாநாட்டின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் மலேசியா கோரிக்கை விடுக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவில் இம்மாதம் 27 முதல் 29 வரை நடைபெறும் உயர் நிலை மனித உரிமை மாநாடு மற்றும் உயர்நிலை ஆயுதக்களைவு மாநாட்டில் மலேசியா பேராளர் குழுவுக்கு தலைமையேற்று முகமது அலாமின் கலந்து கொண்டுள்ளார்




