ஷா ஆலம், பிப் 29 - சிறப்பான அடைவு நிலையைப் பதிவு செய்யும் அரசு
ஊழியர்களை மட்டுமின்றி ஆக்கத்திறன் இல்லாத ஊழியர்களையும்
அடையாளம் காண்பதற்கு ஏதுவாகப் பணி செயல்முறை ஒன்றை மாநில
அரசு உருவாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய செயல்முறையை உருவாக்குவதன் மூலம் பிரச்சனைகளை
அடையாளம் காணவும் உரிய நடவடிக்கைகளையும் எடுக்கவும் வாய்ப்பு
ஏற்படும் என்று கோலக் கிள்ளான் தொகுதி உறுப்பினர் அஸ்மிஸாம்
ஜமான் ஹூரி கூறினார்.
சில அரசு ஊழியர்கள் மத்தியில் காணப்படும் அலட்சியப் போக்கு மற்றும்
சோம்பேறித்தனம் மாநில அரசின் நிர்வாகத்திற்குத் தீங்கினை விளைவிக்கும்
விஷமாக மாறிவிடும் என்றும் அவர் சொன்னார்.
இந்த பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் சிறப்பாகச் சேவையாற்றும்
ஊழியர்களை கௌரவிப்பதோடு மட்டுமின்றி ஆக்கத் திறனற்ற
ஊழியர்களை அடையாளம் காண்பதற்கும் ஏதுவாக பணி செயல்முறை
ஒன்றை உருவாக்கும்படி மாநில அரசுக்கு நான் பரிந்துரைக்கிறேன் என்று
அவர் தெரிவித்தார்.
நியாயமான தொழில் மதிப்பீட்டு முறையை அமல்படுத்துவதன் வாயிலாகச்
சிறப்பாகச் சேவையாற்றுவோர் அங்கீகரிக்கப்பட்டு கௌரவிக்கப்படும்
வேளையில் சிறப்பான அடைவுநிலையைப் பதிவு செய்யாதவர்களுக்கு
எதிராக உரிய நடவடிக்கைகளையும் எடுக்க முடியும் என்று அவர்
குறிப்பிட்டார்.
மாநில சட்டமன்றத்தில் நேற்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான்
ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ்ஜின் உரைக்கு நன்றி தெரிவிக்கும்
தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில்
அஸ்மிஸாம் இவ்வாறு சொன்னார்.
இந்த பணி செயல்முறையை அமல்படுத்துவதன் மூலம் அரசு நிர்வாகத்
தரத்தை உயர்த்தும் அதேவேளையில் பொதுச் சேவைத் துறையின் பணிக்
கலாசாரத்தில் புதுமையையும் புகுத்த முடியும் என்று அவர் மேலும்
கூறினார்.




